”சித்தராமையா இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்” - மகனின் பேச்சால் கர்நாடக அரசியலில் புயல்!
”எனது தந்தை தனது அரசியல் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்” என முதல்வர் சித்தராமையாவின் மகனும், எம்.எல்.சி.யுமான யதீந்திரா தெரிவித்திருப்பது கர்நாடக அரசியலில் மேலும் புயலைக் கிளப்பியுள்ளது.
2023ஆம் ஆண்டு தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த நிலையில், முதல்வர் பதவிக்காக சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே போட்டி ஏற்பட்டது. பின்னர், இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்குவதாக கூறி, காங்கிரஸ் மேலிடம் அவர்களை சமாதானம் செய்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து, முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்வராக டி.கே.சிவகுமார் இருந்து வருகிறார். என்றாலும், கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்து பேச்சுகள் அவ்வபோது எழுந்து வருகின்றன. நவம்பர் மாதத்தில் காங்கிரஸ் அரசாங்கம் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தின் பாதியை எட்டும்போது, மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற ஊகங்கள் பரவலாக உள்ளன. இது சிலரால் ’நவம்பர் புரட்சி’என்று குறிப்பிடப்படுகிறது. அதற்கு உதாரணமாய் கடந்த மார்ச் மாதத்தின்போது, கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ பசவராஜு ஷிவகங்கா, வரும் டிசம்பருக்குள் டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவார் எனவும், இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார். அதேபோல், டி.கே.சிவகுமாருடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்திருந்தார்.
இதற்கெல்லாம் பதிலளித்த சித்தராமையா, “தற்போதைக்கு முதல்வர் பதவியில் மாற்றமில்லை. தனது முழு பதவிக் காலத்தையும் நிறைவேற்றி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் கட்சியை வழிநடத்துவேன். எனினும், உயர்மட்டக் குழு என்ன சொல்கிறதோ, அதுவே இறுதியானது” எனத் தெரிவித்து அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனாலும், இவ்விவகாரம் கர்நாடக அரசியலில் நீறுபூத்த நெருப்பாகவே புகைந்து வருகிறது. இந்த நிலையில், ”எனது தந்தை தனது அரசியல் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்” என முதல்வர் சித்தராமையாவின் மகனும், எம்.எல்.சி.யுமான யதீந்திரா தெரிவித்திருப்பது கர்நாடக அரசியலில் மேலும் புயலைக் கிளப்பியுள்ளது. நிகழ்வொன்றில் பேசிய யதீந்திரா, “எனது தந்தை (சித்தராமையா) தனது அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறார். சதீஷ் ஜர்கிஹோலி காங்கிரஸை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்," என்று கூறினார். யதீந்திராவின் கருத்து அரசியல் வட்டாரங்களில் விவாதங்களைத் தூண்டியுள்ளது.
இருப்பினும், யதீந்திரா பின்னர் தனது அறிக்கை மாநிலத்தில் தலைமை மாற்றம் பற்றியது அல்ல என்று தெளிவுபடுத்தினார். ”எனது அறிக்கை முதலமைச்சரை மாற்றுவது பற்றியது அல்ல. சித்தராமையா 2028க்குப் பிறகு தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கூறியதால், அவருக்குப் பிறகு, சமூக நீதி, மதச்சார்பற்ற சித்தாந்தம் போன்ற காங்கிரஸ் சித்தாந்தத்தில் உறுதியாக நம்பிக்கை கொண்ட ஒருவர் காங்கிரஸ் கட்சியை வழிநடத்த முடியும் என்று மட்டுமே நான் கூறினேன். நான் சொன்னது அவ்வளவுதான்" என ANIயிடம் தெரிவித்துள்ளார். முன்னதாக, ”கர்நாடகாவின் நலனுக்காக எனது தந்தை ஐந்து ஆண்டு கால முதல்வராக இருப்பார். தலைமையில் மாற்றம் என்ற கேள்விக்கே இடமில்லை” எனக் கடந்த வாரம் யதீந்திரா பேசியிருந்ததாகக் கூறப்படுகிறது.