உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 3.2 சதவிகிதம் வரை மட்டுமே உள்ள நிலையில், இந்திய பொருளாதாரம் அடுத்த நிதியாண்டில் 6.3% முதல் 6.8% என்கிற அளவில் வளரும் என மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ள பொருளாதார ஆய்வு அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
சமீபத்தில் ரூபாயின் மதிப்பு குறைந்துள்ள நிலையில், அந்நிய செலவாணி இருப்பு 640 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளதாக பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை நாட்டின் 10 மாத இறக்குமதிக்கு போதுமானதாக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என பொருளாதார ஆய்வு அறிக்கை பரிந்துரை செய்துள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைய முயற்சி செய்யும் என தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் குறிப்பிட்டார்.
பொருளாதார ஆய்வு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அனந்த நாகேஸ்வரன், தேவைக்கேற்ப வேலை நேரத்தை குறைக்கவும் அல்லது அதிகரிக்கவோ நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவை அதிகம் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் அறிக்கை கருத்து தெரிவித்துள்ளது.
2017-18 நிதியாண்டில் ஆறு சதவீதமாக இருந்த வேலையின்மை, சென்ற நிதியாண்டில் 3.2 சதவீதமாக குறைந்துள்ளதாக அறிக்கை பெருமிதம் தெரிவித்துள்ளது. உணவு உற்பத்தி அதிகரித்துள்ளது எனவும் மீன்வளத்துறை சிறப்பாக செயல்படுகிறது எனவும் பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கைபேசிகள் இறக்குமதி முழுக்க குறைந்துள்ளதாகவும், தற்போது நாட்டில் பயன்படுத்தப்படும் கைபேசிகளில் 99 சதவிகிதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன எனவும் பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு, கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ஏற்றுமதியில் இந்தியா தற்போது உலகின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 6 சதவிகித வளர்ச்சியை கண்டுள்ள நிலையில், சேவைகளின் ஏற்றுமதி 11.6 சதவீதமாக உள்ளது என நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உட்கட்டமைப்பு வசதிகளில் செய்யப்படும் முதலீடு 38.8% அதிகரித்துள்ளது எனவும் மக்களவை தேர்தலுக்கு ப் பிறகு முதலீடுகள் 8.2% அதிகரித்துள்ளது எனவும் அறிக்கை தெரிவித்துள்ளது. உலக அரங்கில் நடைபெறும் பல்வேறு மாற்றங்களால் உருவாகும் சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக வேண்டும் எனவும் அதற்கு தனியார் துறையை ஊக்குவிக்க வேண்டும் எனவும் அனந்த நாகேஸ்வரன் கருத்து தெரிவித்தார். பணவீக்கம் குறைந்து வருகிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் 5.4 சதவீதம் என்கிற அளவில் இருந்த பணவீக்கம் இந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 4.9 சதவீதமாக குறைந்துள்ளது பொருளாதாரம் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பங்குச்சந்தைகள் மூலம் தனியார் நிறுவனங்கள் 11 லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்டி உள்ளதாகவும் இது முந்தைய வருடத்தை விட 5% எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுடைய வருமானத்தில் மருத்துவத்துக்காக செலவீடும் சதவிகிதம் குறைந்துள்ளது எனவும் அதே சமயத்தில் அரசு மருத்துவத்துக்காக செலவிடும் தொகை அதிகரித்துள்ளது எனவும் மருத்துவ காப்பீடுகள் தொடர்பாக அறிக்கை விமர்சனம் செய்துள்ளது. -- புது தில்லியிலிருந்து கணபதி சுப்ரமணியம்.