மக்களைவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்த நாடுகளில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடத்தில் கலந்துரையாடுவார் என காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை பொறுப்பாளர் பவன் கெரா எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், கொலம்பியாவின் ஈ.ஐ.ஏ. பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. சித்தாந்தத்தின் மையக் கருத்தே "கோழைத்தனம்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் பலமானவர்களிடம் இருந்து ஓடி ஒளிந்துவிட்டு, பலவீனமானவர்களைத் தாக்குவதை அடிப்படையாகக் கொண்டது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதை விளக்க, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் 'சீனாவுடனான சண்டையைத் தவிர்க்க வேண்டும்' என்ற கூற்றையும், விநாயக் தாமோதர் சாவர்க்கரின் புத்தகத்தில் உள்ள 'இஸ்லாமியர் ஒருவரைத் தாக்கியதில் மகிழ்ச்சியடைந்ததாகக் குறிப்பிடப்பட்ட சம்பவத்தையும்' அவர் மேற்கோள் காட்டினார்.
தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்திய ஜனநாயகத்தின் மீது முழுமையான தாக்குதலை நடத்தி வருகிறது என்றும், இதுவே நாடு சந்திக்கும் மிகப்பெரிய சவால் என்றும் அவர் கூறினார். இந்தியாவின் பல்வேறு மதங்கள், மரபுகள் மற்றும் மொழிகள் கொண்ட பன்முகத்தன்மை நீடிக்க ஜனநாயக அமைப்பே சிறந்த வழி. ஆனால், அந்த ஜனநாயக அமைப்பே தற்போது தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது நாட்டிற்கு ஒரு பெரிய அபாயம் என்று ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். பொறியியல் மற்றும் சுகாதாரத் துறைகளில் இந்தியாவின் திறன் குறித்து நம்பிக்கை தெரிவித்த அவர், நாட்டில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.