கடந்த 50 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியாவிலுள்ள எந்தவொரு மாநிலத்திலும் இடதுசாரிகள் ஆட்சியில் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
அசாம், மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் ஒரு புதிய வரலாற்றைப் படைத்திருக்கிறது. ஆம், அசாம் மற்றும் புதுச்சேரி, மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. எனினும், தனக்கு எதிராக I-N-D-I-A கூட்டணியில் மாபெரும் முகங்களாக தெரிந்த மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் ஆகியோரது ஆட்சி வீழ்த்தப்பட்டுள்ளது. இதில் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்களது தொகுதிகளில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் இந்தத் தேர்தல்மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதன் மூலம் பினராயி விஜயன் இடது முன்னணி 35 இடங்களுக்கு சுருங்கி எதிர்க்கட்சியாக மாறியுள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இடதுசாரி ஆட்சி இல்லாத வரலாற்று நிலை உருவாகி உள்ளது. 2016, 2021 தேர்தல்களில் வென்று 10 ஆண்டுகள் அங்கு ஆட்சி செலுத்திய பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி கூட்டணி நடப்பு தேர்தலில் பெருத்த பின்னடைவைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 50 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியாவிலுள்ள எந்தவொரு மாநிலத்திலும் இடதுசாரிகள் ஆட்சியில் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
முன்னதாக, கேரளாவில்தான் 1957-இல் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசு அமைந்தது. அதற்குப் பிறகு மேற்கு வங்கத்தில் 1977 முதல் 2011 வரை தொடர்ந்து 34 ஆண்டுகள் இடதுசாரிகள் ஆட்சி செய்தனர். அடுத்து திரிபுராவில், மாணிக் சர்க்கார் தலைமையில் 1993 முதல் 2018 வரை இடதுசாரிகள் ஆட்சி செலுத்தினர். 2008ஆம் ஆண்டில் மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் இடதுசாரிகள் ஆட்சியில் இருந்தனர். 2011இல் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியிடமும், 2018இல் திரிபுராவில் பாஜகவிடமும் இடதுசாரிகள் ஆட்சியை இழந்தனர். தற்போது கேரளாவில் காங்கிரஸ் வென்றிருப்பதால், இந்தியாவில் இடதுசாரி ஆட்சி 50 ஆண்டுகளுக்குப் பின் மறைந்துள்ளது.