Petal Gahlot ani
இந்தியா

சீண்டிய பாகிஸ்தான்.. வெளுத்து வாங்கிய இந்தியா.. அதகளமான ஐ.நா. சபை!

காஷ்மீர், பயங்கரவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள் என இந்தியாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபுக்கு, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா பதிலளித்துள்ளது.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார். ர

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், ஐ.நா. பொதுச்சபையின் 81-ஆவது அமர்வில் உரையாற்றியபோது, மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியதுடன், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாகவும் இந்தியாவை விமர்சித்தார். கடந்த ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலையிட்டதாகவும் ஷெபாஸ் ஷெரீஃப் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இதற்கு இந்தியா தனது ’Right of Reply’-ஐ பயன்படுத்தி பதிலளித்தது. அப்போது பேசிய ஐ.நா. சபைக்கான இந்தியாவின் முதன்மைத் தூதர் Petal Gahlot, பாகிஸ்தானின் கருத்துகளை ’வினோதமான கருத்துகள்’ என விமர்சித்ததுடன், பயங்கரவாதம் தொடர்பான பாகிஸ்தானின் நிலைப்பாட்டையும் கடுமையாகக் கேள்வி எழுப்பினார்.

shehbaz sharif

குறிப்பாக, 9/11 தாக்குதலின் 25-ஆவது ஆண்டு நினைவு சமீபத்தில் அனுசரிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்தத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானின் முக்கிய ராணுவப் பயிற்சி மையமான பாகிஸ்தான் மிலிட்டரி அகாடமிக்கு அருகிலுள்ள அபோட்டாபாத்தில் பல ஆண்டுகள் வசித்ததை நினைவுபடுத்தினார். மேலும், ஜனநாயக உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் பேசுவது முரண்பாடானது என விமர்சித்த அவர், காஷ்மீர் விவகாரத்திலும் இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தினார். ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்றும், காஷ்மீர் குறித்துப் பேச வேண்டுமென்றால், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீரின் நிலை குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

குறிப்பாக, ராவல்கோட் பகுதியில் நிலவும் கொலைகள், வன்முறை மற்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். இதன் தொடர்ச்சியாக, இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான தனது நிலைப்பாட்டையும் கஹ்லோட் மீண்டும் வலியுறுத்தினார். “பயங்கரவாதிகளுக்கு ஓடவோ, ஒளிந்துகொள்ளவோ இடமில்லை” என்பதை இந்தியா கடந்த ஆண்டு நிரூபித்துள்ளது என்றும் அவர் கூறினார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, இந்தியா கடந்த ஆண்டு மே 7 அன்று ‘ஆபரேஷன் சிந்துர்’ என்ற நடவடிக்கையைத் தொடங்கியது.

UNSC

“பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் இந்தியாவின் தற்காப்பு உரிமை எப்போதும் பயன்படுத்தப்படும்... பாகிஸ்தானில் இருந்து தொடரும் பயங்கரவாதத்துக்கு தகுந்த எதிர்விளைவுகள் இருக்கும்” என எச்சரிக்கையும் விடுத்தார்.

“இந்த மன்றம் பாகிஸ்தானையும் அதன் கொள்கைகளையும், அதன் பிரதிநிதி பொய்யாகச் சித்தரிப்பதுபோல அல்லாமல், அவை உண்மையில் என்னவோ அப்படியே அங்கீகரிக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஆண்டுதோறும் ஒரே குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் முன்வைப்பதால், அவை உண்மையாகிவிடாது என்றும், பாகிஸ்தானின் ’பயங்கரவாதம், ஏமாற்றுதல் மற்றும் இரட்டை நிலைப்பாடு’ அந்த நாட்டுக்கோ, உலகத்துக்கோ பயனளிக்காது என்றும் அவர் கூறியிருந்தார். Petal Gahlot தெரிவித்த இந்தக் கருத்துகள் தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளன.