பசியால் வாடப்போகும் 27.4 கோடி மக்கள் : எச்சரிக்கை விடுத்த ஐ.நா - இந்தியாவுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு?
சூப்பர் எல் நினோ தாக்கம் 2026 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை உச்சம் எட்டும் நிலையில், அதன் தொடர்ச்சியான விளைவுகள் 2027 முழுவதும் உலக விவசாயத்தை பாதித்து, 27.4 கோடி மக்களை பசியின் விளிம்புக்கு தள்ளும் அபாயம் இருப்பதாக ஐ.நா எச்சரிக்கிறது. ஆப்ரிக்கா, கரிபியன், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் அதிக ஆபத்தில் உள்ளன; இந்தியாவிலும் பருவமழை சீர்குலைந்து விலை உயர்வு ஏற்படலாம்.
பசிபிக் கடலின் மேற்பரப்பில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும் நிகழ்வே எல் நினோ (El Niño) என அழைக்கப்படுகிறது. உலகின் இரண்டில் ஒரு பங்கு பகுதியை ஆக்கிரமித்துள்ள பசிபிக் கடலில் ஏற்படும் இந்த வெப்ப நிலை மாற்றம் உலகம் முழுவதும் காலநிலைகளில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டு இந்த எல் நினோ விளைவு ஏற்படும் என ஏற்கனவே கணிக்கப்பட்ட நிலையில், அதனை மோசமாக்கும் வகையில், இந்த ஆண்டு சூப்பர் எல் நினோ உருவாகியுள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. இதன்படி பசிபிக் கடலின் மேற்பரப்பு வெப்பம் 2 டிகிரி செல்ஸியஸ் அளவு உயரும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சூப்பர் எல் நினோ விளைவு காரணமாக காலநிலை மாற்றம் ஏற்பட்டு, அதனால் உலகம் முழுவதும் கூடுதலாக 27.4 கோடி மக்கள் உணவு பற்றாக்குறைக்கு ஆளாக நேரிடும் என ஐ.நாவின் உலக உணவுத் திட்ட அமைப்பு (WFP) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், தீவிரமடைந்து வரும் 'எல் நினோ' காரணமாக உலகளவில் 27.4 கோடி மக்கள் கோடி மக்கள் கடும் உணவுப் பற்றாக்குறை மற்றும் பசியால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், இந்த எல் நினோ தாக்கம் 2026 செப்டம்பர் முதல் டிசம்பர் மாதத்திற்குள் உச்சத்தை எட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே போல இதன் தொடர் விளைவுகள் 2027-ஆம் ஆண்டு முழுவதும் விவசாய அறுவடைகளைப் பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஏற்கனவே வறுமையின் பிடியில் உள்ள ஆப்ரிக்க மற்றும் கரிபியன் நாடுகளில் இதன் பாதிப்பு அதிகம் இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நாவின் இந்த அவசர எச்சரிக்கை முக்கியமாக தெற்கு மற்றும் சூடான், உகாண்டா, சாட் உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள், மத்திய அமெரிக்க மற்றும் பசிபிக் தீவு நாடுகளை மையமாகக் கொண்டே விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நாவின் இந்த எச்சரிக்கை பட்டியலில் தற்போது இந்தியா இடம்பெறவில்லை என்றாலும், தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் எல் நினோ காரணமாகப் பருவமழை பொழிவில் சீரற்ற நிலைமை உருவாகலாம் என்றும் ஐ.நாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உணவுப்பொருள்கள் விலை கடுமையாக அதிகரிக்கலாம் என்ற நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

