ரஷ்ய ராணுவம் Reuters
இந்தியா

ரஷ்யா ராணுவத்தில் இந்தியர்கள்.. 69 பேரின் நிலை என்ன? எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!!

ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் தொடர்ந்து இணைந்து வருவது குறித்து மத்திய அரசு கடும் கவலை தெரிவித்துள்ளது.

Premkumar S

ரஷ்ய ராணுவத்தில் சேர்வதற்கான வேலைவாய்ப்பு என்ற பெயரில் இந்தியர்கள் ஏமாற்றப்படுவதாகவும், சிலர் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் இதுபோன்ற வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, தெலங்கானாவில் சமீபத்திய சம்பவம் ஒன்றின் மூலம் இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.

ரஷ்யாவில், அதிக வருமானம் தரும் வேலைகள் கிடைக்கும் என்ற முகவர்களின் வாக்குறுதிகளால் ரஷ்யாவுக்குச் சென்ற பல இளைஞர்கள், தாங்கள் இராணுவ முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளுக்குத் தள்ளப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

ரஷ்யா

ஆனால், இந்த விவகாரம் சமீபத்தில் தொடங்கியது அல்ல. கடந்த மார்ச் 2024-ல், ரஷ்ய இராணுவத்தில் சேருமாறு தாங்கள் ஏமாற்றப்பட்டதாக இந்திய ஆண்கள் கூறும் காணொளிகள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தான், இந்த விவாகரம் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.

இதையடுத்து, கடந்த செப்டம்பர் 30-ம் தேதி மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ரஷ்யாவில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து இந்தியர்கள் முழுமையாக விசாரித்து, அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. மேலும், அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் ரஷ்ய ராணுவத்தில் தாங்களாகவே சேர்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், இதுபோன்ற வேலைவாய்ப்புகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

ஆனால், அதற்குப் பிறகும் இந்தியர்கள் ரஷ்ய ஆயுதப் படைகளில் சேர்வது தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 259 இந்தியர்கள் ரஷ்ய ஆயுதப் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 139 பேர் இந்திய அரசின் முயற்சியால் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரந்திர் ஜெயஸ்வால்

அதே நேரத்தில், 69 இந்தியர்கள் இன்னும் ரஷ்ய ராணுவத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களின் இருப்பிடம் மற்றும் நிலை குறித்து ரஷ்ய அதிகாரிகளிடம் இந்திய அரசு தொடர்ந்து தகவல் கேட்டு வருகிறது.

மேலும், ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றியபோது 51 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ரஷ்யாவில் வேலைவாய்ப்பு என்ற பெயரில் வரும் குறிப்பாக ராணுவம் அல்லது பாதுகாப்பு தொடர்பான வேலைகளை இந்தியர்கள் ஏற்க வேண்டாம் என்றும், அங்கீகரிக்கப்படாத முகவர்கள் மற்றும் அமைப்புகளிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தியுள்ளது.