Unemployment ANI
இந்தியா

கவலையளிக்கும் வேலை வாய்ப்பின்மை.. 9 கோடி இளைஞர்கள் பாதிப்பு - நிதி ஆயோக் அதிர்ச்சித் தகவல்!!

இந்தியாவில் கல்வி, பயிற்சி மற்றும் வேலையில் இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்பது கோடியாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பெருஞ்செய்தி பகுதியில் இப்போது விரிவாக பார்க்கலாம்.

PT WEB

மத்திய அரசின்கீழ் உள்ள நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவில் உள்ள சுமார் 600 மாவட்டங்களில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 250 மாவட்டங்களில் 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் கல்வி, வேலைவாய்ப்பு அல்லது எந்தவிதமான திறன் பயிற்சியும் பெறாமல் அவதிப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக எட்டு கோடியே 70 லட்சம் இளைஞர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நிதி ஆயோக்

தென்மாநிலங்களை விட வடமாநிலங்களில் இந்த பாதிப்புகள் அதிகரித்து காணப்படுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக பிகார், உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அதிக இளைஞர்கள் அவதியுற்று வருவதாகவும், மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள், இந்த மாநிலங்களில் பாதிப்பை சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் உள்ள கபிர்தம் , ராஜ்நந்த்காவன், உத்தர் பஸ்தர் கன்கர் ஆகிய மாவட்டங்கள், ஹிமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டம், கேரளாவின் எர்ணாகுளம், மத்திய பிரதேசத்தின் மாண்ட்லா ஆகிய மாவட்டங்களிலும், குறைந்த எண்ணிக்கையிலான இளைஞர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மிகக் குறைவான அளவாக 4.1 சதவீத இளைஞர்கள் மட்டுமே ஒடிஷாவின் நபரங்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வித் தகுதிக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளி மற்றும் கூடுதல் பயிற்சி பெற உள்ள நிதி நெருக்கடி போன்றவையே இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு இந்த மனிதவளப் பற்றாக்குறையைக் களைந்து, மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் மானிய விலையில் திறன் பயிற்சிகளையும், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளையும் சுயதொழில் வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் என அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.