\
Public outrage grows over Rapidos daily extra charges
model imagegoogle gemeni

’RAPIDO-வை இனி நம்ப முடியாது; தினமும் EXTRA CHARGE..' கொந்தளிக்கும் பொதுமக்கள்!

சமீபகாலமாக, செயலியில் காட்டப்படும் கட்டணத்தைவிட கூடுதலாகப் பணம் செலுத்துமாறு பயணிகளிடம் ஓட்டுநர்கள் கேட்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
Published on

செய்தியாளர்- ராஜ்குமார்.ர

தமிழகத்தில் ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட ஆன்லைன் டாக்சி தளங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆட்டோ பிடிக்க ஆட்டோ ஸ்டாண்டுக்குச் செல்ல வேண்டியதில்லை... இருக்கும் இடத்திலேயே பிக்கப்... செல்ல வேண்டிய இடத்திலேயே டிராப்... என அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் டாக்சி சேவைகள், ஆரம்ப காலத்திலேயே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால், சமீபகாலமாக, செயலியில் காட்டப்படும் கட்டணத்தைவிட கூடுதலாகப் பணம் செலுத்துமாறு பயணிகளிடம் ஓட்டுநர்கள் கேட்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

Model image
Model imagegrok

சமீபத்தில், இன்ஸ்டாகிராம் பிரபலமான ஒருவர் ரேபிடோவில் பைக் டாக்சியை புக் செய்துவிட்டு நீண்டநேரமாகக் காத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார். ஆனால், ஓட்டுநர் நீண்ட நேரமாகியும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, கல்லூரிக்குச் செல்ல வேண்டியிருப்பதால் விரைந்து வருமாறு ஓட்டுநருக்கு அந்த நபர் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதற்கு ஓட்டுநர், “கூடுதலாக 50 ரூபாய் கொடுத்தால் உடனே வருகிறேன். இது Priority Cab” என பதிலளித்ததாக அந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் தெரிவித்துள்ளார். மேலும், சமீபகாலமாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

Public outrage grows over Rapidos daily extra charges
ரேபிடோ பைக் டாக்சிக்கு தடை விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

மேலும், கல்லூரிக்குச் செல்லும் நபர்களிடம் கூடுதலாக 10 அல்லது 20 ரூபாய் கேட்டால் சில நேரங்களில் கொடுக்க முடியும். ஆனால், செயலியில் 120 ரூபாய் கட்டணம் காட்டப்பட்டால், 200 ரூபாய் கொடுக்குமாறு, அதாவது கூடுதலாக 80 ரூபாய் கேட்பது நியாயமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கெனவே ஒரு Ride-க்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாகக் காட்டிவிட்டு, அந்தத் தொகைக்கு Ride கிடைக்கவில்லை என்றால், அதைவிட அதிகமான தொகையை செலுத்தும்படி செயலியில் காட்டப்படுவதாகவும் புகார்கள் எழுந்ததால் ரேபிடோ நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமான CCPA 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. மேலும், பயணிகளை கூடுதல் கட்டணம் செலுத்தத் தூண்டும் வகையிலான prompts மற்றும் இதுபோன்ற நடைமுறைகளை நிறுத்துமாறும் CCPA உத்தரவிட்டது. ஆனால், இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருப்பதாகப் பயணிகள் தெரிவித்து வருகின்றனர்.

Public outrage grows over Rapidos daily extra charges
கர்நாடகா|பெண்ணை அறைந்த ரேபிடோ ஓட்டுநர்; வைரலான வீடியோ!

அந்த இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் பதிவில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு ரேபிடோ நிறுவனமும் பதிலளித்துள்ளது. அதில், “கூடுதல் கட்டணம் கேட்கும் நிகழ்வுகளை நீங்கள் மீண்டும் மீண்டும் சந்திக்க நேரிட்டதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். செயலியில் காட்டப்படும் கட்டணமே நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் என்று எதிர்பார்த்திருக்கும் நிலையில், இதுபோன்ற அனுபவம் எவ்வளவு ஏமாற்றமாகவும் நியாயமற்றதாகவும் இருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. நேர்மையான மற்றும் வெளிப்படையான சேவையை உறுதிசெய்ய, இதுபோன்ற புகார்களை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிப்போம். குறிப்பிட்ட ஒரு பயணம் தொடர்பாக நாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நீங்கள் விரும்பினால், தயவுசெய்து உங்கள் Ride ID மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை தனிப்பட்ட செய்தி (DM) மூலம் பகிருங்கள். அதனை ஆய்வு செய்து, அதற்கேற்ப உரிய நடவடிக்கை எடுப்போம்” என ராபிடோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

rapido

அந்தப் பதிவில் ஆன்லைன் டாக்சி தளங்கள் தொடர்பாக பயணிகள் பல்வேறு பிரச்னைகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, கூடுதல் கட்டணம் வசூலிப்பது, முன்பதிவு செய்த பயணத்தை ரத்து செய்வது, பாதியிலேயே இறக்கிவிடுவது, பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவது, பயணிகளின் தனிப்பட்ட தொலைபேசி எண்ணை எடுத்துக்கொண்டு தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பயணிகள் முன்வைக்கின்றனர். ஒருபுறம், ஆன்லைன் டாக்சி சேவைகள் மக்களின் பயணத்தை எளிதாக்கியுள்ள நிலையில், மறுபுறம் கட்டண வெளிப்படைத்தன்மை மற்றும் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுவது ஒன்லைன் டாக்ஸி தளங்கள் மீதான நம்பிக்கையைக் குறைத்துள்ளது. மேலும், அரசு இதுபோன்ற ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்களைக் கட்டமைக்கக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

Public outrage grows over Rapidos daily extra charges
“யார்கிட்டயாச்சும் சொன்னேன்னு வச்சிக்கோ” ரேபிடோ பைக்கில் சென்ற பெண்ணிடம் ஓட்டுனர் அத்துமீறல்..
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com