இந்தியாவில், சமீபகாலமாக ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் பற்றிய செய்திகள் அதிகமாகி வருகின்றன. கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையின்போது பாகிஸ்தான் அணி இந்தியா வந்து விளையாடியபோது, அந்த அணிக்கு எதிராக ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் விண்ணைப் பிளந்தது. அதற்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் பள்ளி வகுப்பறையில் ‘ஜெய் ஸ்ரீராம்' எழுதிய மாணவர் தாக்கப்பட்டார். தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் இதே கோஷத்துடன் தேவாலயத்தில் காவிக் கொடி ஏற்றப்பட்டது. கர்நாடகாவில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைச் சுற்றி இதே கோஷம் ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து, மகாராஷ்டிராவில் இதே கோஷத்துடன் மசூதி ஒன்று இடிக்கப்பட்டது. இதைவிடக் கொடுமை என்னவென்றால், பல்கலைக்கழகம் மாணவர்கள், ‘ஜெய் ஸ்ரீராம்’ என எழுதி தேர்ச்சி பெற்றிருந்தது பேசுபொருளானது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் பெண் ஒருவர், சால்வை விற்க வந்த இருவரை, ‘ஜெய் ஸ்ரீராம்’ எனச் சொல்லவைத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இமாச்சல பிரதேச மாநிலம் காங்க்ரா அருகே கந்தர் பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்தவர் சுஷ்மா தேவி. இவர் பிளாக் டெவலப்மென்ட் கமிட்டியின் உறுப்பினராக உள்ளார். இந்த பகுதியில் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் சால்வை வியாபாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், காஷ்மீரின் குப்வாரா பகுதியைச் சேர்ந்த அலி முகமது மிர் என்பவர் தனது மகன் பிர்டோஸ் அகமது மிர் என்பவருடன் சேர்ந்து சால்வை வியாபாரம் செய்துவந்தார்.
அப்போது அவர்கள் இருவரையும் சுஷ்மா தேவி அழைத்து மிரட்டல் விடுத்துள்ளார். “நாம் இந்தியாவில் இருக்கிறோம். இந்தியர்கள் என்பதை நிரூபிக்க ’ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள்” என மிரட்டியுள்ளார். இதற்கு அவர்கள், ” ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்கிறீர்களா? ஆனால், நான் வேறு மதத்தைச் சேர்ந்தவன். உங்களிடம் ஒருவர், குரான் ஓதச் சொன்னால் செய்வீர்களா?'' எனக் கேள்வி கேட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்களை மிரட்டிய சுஷ்மா தேவி, ”நீங்கள் இனிமேல், இந்த ஏரியாவுக்கு மீண்டும் வியாபாரம் செய்ய வரக்கூடாது. உங்களிடம் யாரும் பொருள் வாங்க மாட்டார்கள்'' என எச்சரித்து அனுப்பியுள்ளார். பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவை ஜம்மு மற்றும் காஷ்மீர் மாணவர் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாசீர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இதனால் அது இணையத்தில் வைரலானது.
அதன்பிறகு பாதிக்கப்பட்ட 2 வியாபாரிகளும் ஆலம்பூர் போலீசில் புகாரளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஷ்மா தேவியிடம் விசாரணை நடத்தினர். அதன்பிறகு, சுஷ்மா தேவி அவர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ”நான் எனது தவறை ஏற்றுக்கொள்கிறேன். நான் வேண்டுமென்றோ அல்லது ஏதேனும் தவறாகச் சொல்லியிருந்தாலோ அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் நான் அவர்களிடம் என் வீட்டுக்கு வரக்கூடாது. நாங்கள் சில பெண்கள் தனியாக வசிக்கிறோம். வெளிநபர்களை கண்டால் பயம் இருப்பதாக கூறினேன்'' என அதில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட வியாபாரிகள் அவர் மீது அளித்த புகாரைத் திரும்பப் பெற்றனர். முன்னதாக, இந்த வீடியோ வைரலானவுடன், ஜம்மு காஷ்மீர் அரசியல்வாதிகள் பலரும் அந்தப் பெண்ணைக் கைது செய்ய வலியுறுத்தி இமாச்சல் பிரதேச அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.