
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் கத்வா மாவட்டம் பெனி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியில் இந்து மதத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், கடந்த 25ஆம் தேதி, வகுப்பறையில் உள்ள போர்டில் 'ஜெய் ஸ்ரீராம்' என எழுதியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பள்ளி ஆசிரியர் பரூக் அகமது மற்றும் தலைமை ஆசிரியர் முகமது ஹபீஸ், மாணவனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
ஆசிரியர்கள் தாக்கியதில் காயமடைந்த மாணவர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை குல்தீப் சிங் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவனை தாக்கிய ஆசிரியர் பரூக் அகமதுவை நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பள்ளி தலைமை ஆசிரியர் முகமது ஹபீசை தீவிரமாக தேடி வருகின்றனர்.