நாடு முழுவதும் பாஜக தலைமை மாநில தலைவர்களை மாற்றியமைக்கும் பணியில் அதற்கான தேர்தலை நடத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாட்டில் கூட அண்ணாமலை மாற்றப்பட்டு புதிதாக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அதேபோல் இன்னும் சில மாநிலங்களிலும் அதற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் புதிய பாஜக தலைவராக ஹேமந்த் கண்டேல்வால் அறிவிக்கப்பட்டார். கண்டேல்வாலின் முன்மொழிபவராக இருந்த முதலமைச்சர் மோகன் யாதவ், மாநில பாஜக அலுவலகத்தில் வேட்புமனுவை சமர்ப்பித்தார். இந்த நிகழ்வில், கஜுராஹோ நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில பாஜக தலைவருமான விஷ்ணு தத் சர்மா, மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், வீரேந்திர குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், இன்று ஒருமனதாக பாஜக மாநிலத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார்.
பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற ஹேமந்த், “பாஜக வெற்றியின் புதிய உயரங்களை எட்டும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவர்களின் திறன்களின் அடிப்படையில் பொறுப்புகள் வழங்கப்படும். கட்சி எல்லைக்கு எதிராகச் செல்லும் எவரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அதே நேரத்தில் ஒவ்வொரு கட்சித் தொழிலாளியும் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்” உறுதியளித்தார்.
ஹேமந்த் கண்டேல்வாலின் தந்தை விஜய் குமார் கண்டேல்வால், பெதுல் தொகுதியில் இருந்து நான்கு முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். 2007ஆம் ஆண்டு தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, ஹேமந்த் கண்டேல்வால், பெதுல் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதல் முறையாக மக்களவைக்குள் நுழைந்தார். அவர் 2010 முதல் 2013 வரை பாஜகவின் பெதுல் மாவட்டத் தலைவராகவும் பணியாற்றினார்,
மேலும் 2013 முதல் 2018 வரை பெதுலின் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். 2023 சட்டமன்றத் தேர்தலில் ஹேமந்த் கண்டேல்வால் மீண்டும் அந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், மாநில பாஜகவின் பொருளாளராகவும் பணியாற்றினார், தற்போது காவி அமைப்புடன் தொடர்புடைய ஒரு அமைப்பான குஷாபாவ் தாக்கரே அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.