ஆபரணத் தங்கம் pt web
இந்தியா

ரூ. 70,000 வரை தங்கம் பறக்கும்... அடித்துச் சொல்லும் Goldman Sachs..!

தங்கத்தின் விலை தற்போதைய நிலையிலிருந்து 19 சதவிகிதம் உயரும் என கணித்திருக்கிறது கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம்.

karthi Kg

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ரூ. 56,720க்கு விற்கப்படுகிறது. கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூ. 7,090க்கு விற்பனையாகிறது. நவம்பர் முதல் நாள் ரூ. 7,455 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று 365 ரூபாய் குறைந்து 7,090 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களோடு விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது.

தீபாவளி சீசன் முடிந்துவிட்டதால், ஆபரணத்தங்கத்தில் பெருமளவில் வாங்குவது சற்று குறைந்திருக்கிறது. இஸ்ரேல் லெபனான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருப்பதால், தங்கத்தின் விலையேற்றத்தில் சிறிது தேக்கநிலை காணப்படுகிறது. அதே சமயம், தங்கத்தின் விலை தற்போதைய நிலையிலிருந்து 19 சதவிகிதம் உயரும் என கணித்திருக்கிறது கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம்.

தங்கம் விலை

தங்க விலை உயர்வுக்கான பிரதான காரணங்களாக அமெரிக்க நிதி நிலைத்தன்மை பார்க்கபடுகிறது. உலக மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தங்கம் ஒரு அவுன்ஸ் 3000 டாலர் வரை உயரும் என முன்பே கணித்திருந்தது கோல்ட்மேன் சாக்ஸ். மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதால் , தங்கம் மேலும் 9 சதவிகிதம் வரை உயரும் என தற்போது அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது ஒரு அவுன்ஸ் கிட்டத்தட்ட 3150 அமெரிக்க டாலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,635.37 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகிவருகிறது.

உலக அளவில் போர்ச் சூழலும், பொருளாதார மந்த நிலையும் அதிகரித்துவருவதால், தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கும் போது, தங்கத்தின் விலையில் சிறிய தடுமாற்றம் இருக்கலாம். ஆனால் அதெல்லாம் தற்காலிகமானதுதான். விலை குறையும் போதெல்லாம் சிறிய அளவில் தங்கத்தை வாங்கி முதலீடு செய்வது எதிர்காலத்திற்கு நல்லது.