உலகளவில் பொருளாதார மாற்றங்கள் மற்றும் பங்கு சந்தை வீழ்ச்சியால் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. எம்.சி.எக்ஸ் சந்தையில் 24 கேரட் தங்கத்தின் விலை 4,300 ரூபாய் சரிந்து விற்பனை செய்யப்படுகிறது.
செய்தியாளர் - கார்த்திகேயன்
பொதுவாக, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. சுவிட்சர்லாந்து, துபாய் மாதிரியான நாடுகளிடம் இருந்து மிகப்பெரிய டீலர்கள் தங்கத்தை வாங்கி, எம்.சி.எக்ஸ் என்ற மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் சந்தையில் விற்பனை செய்வார்கள். இந்த சந்தையில் விற்பனை செய்யப்படும் தங்கத்தை தான், பெரிய பிராண்டுகளின் உரிமையாளர்கள் வாங்கி, ஆபரணத் தங்கமாக மாற்றி, கடைகளில் விற்பனை செய்கிறார்கள். எனவே, எம்.சி.எக்ஸ்-ல் தங்கத்தின் விலையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அது பொதுமக்களின் வாங்கும் திறனையும் பாதிக்கும். எம்.சி.எக்ஸில் விற்பனை செய்யும் தங்கம், சாதாரண நகைக்கடைக்கு வரும்போது, சுமார் 2 சதவீதம் வரை விலையில் மாறுபடும்.
இவ்வாறு, இந்தியாவில் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில், எம்.சி.எக்ஸின் பங்கு மிகவும் முக்கியமானது. இப்படியான சூழ்நிலையில், எம்.சி.எக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை அதிரடி சரிவை சந்தித்துள்ளது. அதாவது, எம்.சி.எக்ஸ் சந்தையில் ஒரே நாளில், 10 கிராமுக்கு 4 ஆயிரத்து 300-க்கு மேல் சரிந்த தங்கம், 1 லட்சத்து 38 ஆயிரத்து 419-ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது 24 கேரட் தங்கத்தின் விலை தான். ஆபரணத் தங்கத்தின் விலை, இன்னும் அதிகமாகவே குறையும்.
உலக அளவில் நிலவும் கச்சா எண்ணெய் பற்றாக்குறையால், அதன் விலை உயருதல், பல்வேறு நாடுகளில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்தல் போன்ற காரணங்களால், தங்கத்தின் விலை சரிந்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், பாதுகாப்பான அமெரிக்க அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என்று கணிக்கப்படுவதால், பலரும் தங்கத்தை விற்பனை செய்துவிட்டு, இந்த பத்திரங்களை வாங்குகின்றனர். இதனாலும், விலை குறைவதாக சொல்லப்படுகிறது. பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியால், முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்து, இழப்பை சமாளிப்பதாலும் விலை வீழ்ச்சி ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு பல்வேறு காரணங்கள் இருப்பதால் தான், தங்கத்தின் விலை தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகின்றன. பண்டிகைக் காலத்தைக் குறிவைத்துக் காத்திருக்கும் பொதுமக்களுக்கும் நுகர்வோருக்கும் தங்கம் வாங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகத் தோன்றினாலும், சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்துகிறார்கள். உலக அளவில் பொருளாதார மாற்றம் ஏற்படுதல், மத்திய வங்கிகளின் கொள்கைகள் மாறி வருதல் போன்ற காரணங்களால் விலை குறைகிறது. இது நீண்ட காலத்திற்கு லாபமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே, தங்களின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, முடிவெடுப்பது நல்லது என்றும், நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.