Gold  Reuters
இந்தியா

தங்கம் விலை ரூ.1.87 லட்சம்? வரலாறு காணாத உயர்வு! மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

வரும் 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 1 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று IBJA கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

PT WEB

தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை எட்டும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். 2027-ல் ஒரு அவுன்ஸ் தங்கம் 6,200 டாலர் வரை உயரக்கூடும். இந்தியாவில் 10 கிராம் தங்கம் 1.88 லட்சம் ரூபாய் வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அமெரிக்க வட்டி விகிதங்கள் மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்கள் தங்கத்தின் விலையை குறுகிய காலத்தில் பாதிக்கலாம்.

செய்தியாளர் - கார்த்திகேயன்

கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை பெருமளவு குறைந்துக் கொண்டே வருகிறது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகமாக இருப்பதால், அந்நாட்டின் அரசு நிதி பத்திரங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் நிலவுகிறது. இதனால், மிகவும் பாதுகாப்பான மற்றும் வட்டியை தரும் அந்த அரசு பத்திரங்களை வாங்குவதற்காக, பலரும் தங்கத்தை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தான், தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்துக் கொண்டே வருவதாக சொல்லப்படுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 12 ஆயிரத்து 615 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 1 லட்சத்து 920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பலரும் 1 லட்சத்திற்கும் கீழே குறையுமா என்றும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படியான சூழ்நிலையில், தங்கத்தின் விலை எதிர்காலத்தில் என்னவாக இருக்கும் என்று, IBJA என்று அழைக்கப்படும் நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதாவது, 2027-ல் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் என்று, IBJA-வின் செயலாளர் சுரேந்திர மேத்தா தங்களது கணிப்புகளை வெளியிட்டிருந்தார். அதன்படி, சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 6 ஆயிரத்து 200 டாலர் வரை உயரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 180 டாலர் வரை உயரும் என்றும் கூறப்படுகிறது.

gold

இது இந்தியாவில், 10 கிராமுக்கு சுமார் 1 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என்றும், ஒரு கிலோ வெள்ளி 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இந்த எதிர்காலக் கணிப்பில் சில உடனடி சவால்களும் உள்ளன. அமெரிக்க வட்டி விகிதங்கள், கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் (அடுத்தகட்ட கொள்கை முடிவுகள் குறித்த நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறுகிய காலத்தில் அழுத்தத்தை எதிர்கொள்ளலாம் என்றும் சுரேந்திர மேத்தா எச்சரித்துள்ளார்.

என்னதான் அதிர்ச்சி அளிக்கும் கணிப்புகளை நிபுணர்கள் வெளியிட்டிருந்தாலும், இதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. உண்மையான உள்நாட்டு விலையானது சர்வதேச புல்லியன் சந்தை நிலவரங்கள், ரூபாய்-டாலர் நாணய மாற்று விகிதம், இறக்குமதி வரிகள் மற்றும் சந்தை நிலவரங்களைப் பொறுத்தே அமையும்.