உங்களிடம் தங்கம் இருக்கா? சுப்ரீம் கோர்ட் அதிரடி எச்சரிக்கை! அதிர்ச்சியில் மக்கள்!
உச்சநீதிமன்றம், தங்கம் வைத்திருக்கும் நபர்கள் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்குகளில் சிக்காமல் இருக்க, தங்கம் வாங்கிய ரசீதுகளை பாதுகாப்பாக வைத்திருக்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் - கார்த்திகேயன்
பீகார் மாநிலத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு அரசு ஊழியர் மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2015-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, பாட்னா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, தன்வசம் உள்ள தங்கம் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் விதிப்படி, 500 கிராம்கள் என்ற அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் தான் உள்ளது. எனவே, அதற்கான ரசீதுகளை நான் சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று, அரசு ஊழியர் தரப்பு நீதிமன்றத்தில் வாதம் முன்வைத்தனர். இதனை ஏற்று, பாட்னா உயர் நீதிமன்றமும் வழக்கினை ரத்து செய்தது. ஆனால், இந்த தீர்ப்பினை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பீகார் அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, பல்வேறு அதிரடி உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதாவது, ஒரு திருமணமான பெண் 500 கிராம் வரையும், திருமணம் ஆகாத பெண் 350 கிராம் வரையும், ஒரு ஆண் 100 கிராம் வரையும் தங்கம் வைத்திருக்கலாம் என்ற பாதுகாப்பு வரம்பு உள்ளது. வருமான வரி பரிசோதனைகளின்போது, அந்த நகைகள் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படாமல் இருப்பதற்கு தான், இந்த பாதுகாப்பு வரம்பு உள்ளது. ஆனால், அதற்காக கண்டிப்பாக ஆதாரத்தை வழங்கவே தேவையில்லை என்று, அர்த்தம் ஆகிவிடாது. குறிப்பாக, ஊழல் மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்குகளில் சிக்கும் நபர்கள், அந்த தங்கம் எவ்வாறு வாங்கப்பட்டது என்று ஆதாரத்தை, அதிகாரிகளிடம் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று, நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வளவு நாட்கள் பொதுமக்கள் நம்பிக் கொண்டு இருந்த சட்டம் உண்மை இல்லை என்று, பொட்டில் அடித்தது போல் அழுத்தமாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, இனிமேல் தங்கம் வாங்கும் பொதுமக்கள், அதற்கான கட்டண ரசீதுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது. திருமணம், இதர குடும்ப நிகழ்ச்சிகளில் பரிசாக பெற்ற நகைகளுக்கான ஆதாரத்தை தெளிவாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. காலங்காலமாக வீட்டில் உள்ள பாரம்பரியப் பழைய நகைகள் அனைத்திற்கும் பில்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இருப்பினும், அது குறித்த நியாயமான தகவல்களை குடும்பத்தினரால் விளக்க இயல வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சாதாரண நடுத்தர வர்க்கத்தினரை நேரடியாக பாதிக்காது என்று கூறப்பட்டாலும், எதிர்காலத்தில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்க, கட்டண ரசீதுகளை பாதுகாப்பாக எடுத்து வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

