\
Gold Theft at Madurai Tanishq Jewellery shop
Model imagechat gpt

29 கிலோ தங்கம்.. ட்ராலியுடன் வந்து கொள்ளை.. மதுரையில் அரங்கேறிய துணிகரம்.. ஸ்கெட்ச் போட்டது எப்படி?

மதுரையில் பிரபல நகைக்கடை ஒன்றில் எந்த துளையும் இடாமல், கதவின் பூட்டை உடைக்காமல், நூற்றுக்கணக்கான சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் எப்படி நடந்தது?... பார்க்கலாம்...
Published on: 

செய்தியாளர்: பிரசன்னா

மதுரை காளவாசல் பகுதியில் உள்ள பைபாஸ் சாலையில் 15 நாட்களுக்கு முன்பு டாடா நிறுவனத்தின் தனிஷ்க் நகைக்கடை திறக்கப்பட்டது. நேற்று இரவு கடையில் விற்பனை முடிந்ததும் வழக்கம்போல கடை ஊழியர்கள் ஷோரூமைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். ஆனால், இன்று காலை வந்து பார்த்தபோது, கடையில் இருந்த நகைகள் பலவற்றை காணவில்லை என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், சம்பவம் தொடர்பாக உடனடியாக எஸ்.எஸ். காலனி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கொள்ளைச் சம்பவம் அரங்கேறியிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

PT

புதிதாக திறக்கப்பட்ட அந்தக் கடையில் இருந்த சுமார் 30% நகைகள், அதாவது 500 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியானது. அதாவது கொள்ளை போன நகைகளின் மதிப்பு 40 கோடி ரூபாயாக இருக்கலாம் என உத்தேசமாக சொல்லப்பட்டது. இதனால் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல் துறையினர், தொடக்கத்தில் கொள்ளைச் சம்பவம் எப்படி நடந்தது என தெரியாமல் குழம்பிப் போயிருந்தனர்.

காரணம், தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அரங்கேறிய விதம்தான். கடையின் சுவர் மற்றும் கதவுகளுக்கு எந்தச் சேதமும் இல்லை. அவற்றை உடைக்காமல், வழக்கமான நுழைவுப் பாதை எதையும் பயன்படுத்தாமல் கொள்ளையர் எப்படி உள்ளே நுழைந்தனர் என்பதுதான். எனவே கொள்ளையர் லிஃப்டை பயன்படுத்தியிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகித்திருந்தனர்.

லிஃப்ட் எந்தத் தளங்களில் எல்லாம் நின்றது, அதன் இயக்கம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்டதா? முதலில் லிஃப்ட் வழியாகக் கடைக்குள் நுழைவதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சாரம் வழியாக கொள்ளையர் உள்ளே நுழைந்தது தெரியவந்துள்ளது. ஆம், 4 தளங்களைக் கொண்ட நகைக்கடையில், தரைத்தளம் முழுவதும் பார்க்கிங்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. முதல் தளத்தில் மட்டுமே தற்போதைக்கு நகைக்கடை செயல்பட்டு வந்தது. இரண்டு மற்றும் மூன்றாவது தளத்தில் கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தன.

PT

இந்நிலையில், கட்டடத்தின் பின்புறம் இருந்த சாரம் வழியாக மேல்தளத்துக்குச் சென்ற நபர், லிஃப்ட் பராமரிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய கதவை ஸ்க்ரூ ட்ரைவரைக் கொண்டு திறந்து, அதன் வழியாக லிஃப்டுக்குள் நுழைந்து, முதல் தளத்திற்கு சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஷோகேஸில் இருந்த நகைகளுக்கு வால்ட்டோ அல்லது பாதுகாப்பு பெட்டகமோ அமைக்கப்படாத நிலையில், அதைப் பயன்படுத்தி ஷோகேஸில் இருந்த நகைகளை மட்டும் ட்ராலி பேக் அதாவது சக்கரத்துடன் கூடிய பை ஒன்றில் அள்ளிச் சென்றிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.

தொடக்கத்தில் மூவர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என காவல் துறையினர் கணித்த நிலையில், ஒருவர் மட்டுமே வந்துசென்றதாகத் தெரிகிறது. அதிகாலை சுமார் 3 மணியளவில் கடைக்குள் நுழைந்த அந்த நபர், தன் அடையாளத்தை முழுமையாக மறைத்துக் கொள்ளும்படி, உடலை முழுவதுமாக மூடி ஆடை அணிந்திருந்ததாகவும், ஷூ, கையுறை மற்றும் பாதுகாப்பு பணிகளின்போது பயன்படுத்தப்படும் பி.பி.இ. உடையைப் போன்ற ஒரு முழு உடல் மறைப்பு ஆடையை அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

கடையின் முன்பக்க கதவில் மட்டுமே அலாரம் பொருத்தப்பட்டிருந்தது கொள்ளையருக்கு வசதியாக இருந்துள்ளது. எனவே, அவர் வந்துசென்ற தடயமே தெரியாமல் இருந்துள்ளது. முன்பு 500 சவரன் எனச் சொல்லப்பட்ட நிலையில், தற்போது 29 கிலோ நகைகள் எனச் சொல்லப்படுகிறது. கணக்கெடுப்பு முழுமையாக முடியும் பட்சத்திலேயே கொள்ளை போன நகையின் மதிப்பு என்ன என்பது தெரியவரும். சம்பவம் தொடர்பாக தொடர்ச்சியாக வழக்குப்பதிந்து விசாரித்து வரும் மாநகர காவல் துறை மூன்று தனிப்படைகளை அமைத்திருக்கிறது.

Model image
Model imagechat gpt

எவ்வித சேதத்தையும் ஏற்படுத்தாமல், முன்பின் தெரியாத கடையில் இப்படியொரு சம்பவத்தை நிறைவேற்ற வாய்ப்பு குறைவு எனும் நிலையில், அதிக அளவில் கடையில் நகைகள் இருப்பது கொள்ளையர்களுக்கு எவ்வாறு தெரிந்தது என்பதும் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கூடவே, இவ்வளவு பெரிய பிரபலமான நகைக் கடையின் பாதுகாப்பு ஏற்பாடுகள், நகைகள் வைக்கப்பட்டிருந்த இடம், கடை மூடும் நேரம் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள கொள்ளையர்கள் என்ன மாதிரியான திட்டமிடல்களை மேற்கொண்டார்கள் என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது காவல் துறையின் விசாரணையில் கடையின் கடைநிலை ஊழியர் தொடங்கி, முன்பு கடையின் கட்டடப் பணிக்காக பணியாற்றிய எலெக்ட்ரீஷியன், பிளம்பர் வரை நீண்டிருக்கிறது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் உடனடியாக விற்பனை செய்யப்படவோ அல்லது உருக்கி வேறு வடிவில் மாற்றப்படவோ வாய்ப்புள்ளதால், பிற நகை விற்பனை நிலையங்களிலும் விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.