ப. சிதம்பரம், ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைத்த ஒன்றிய அரசின் முடிவை வரவேற்கிறார். கடந்த எட்டு ஆண்டுகளாக அதிக வரி விகிதங்கள் மூலம் நுகர்வோரிடம் அதிகமாக வசூலிக்கப்பட்டது. இப்போது 5% - 18% என்ற விகிதங்களை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி தருகிறது. ஆனால், இது மன்னிப்பு கேட்க வேண்டிய தருணம் என்றும் அவர் கூறுகிறார்.
ஒன்றிய அரசுக்கு இறுதியாக ‘ஞானம்’ பிறந்துவிட்டது. பரவலாக எல்லா சரக்குகள் – சேவைகள் மீது விதித்து வந்த ‘பொது சரக்கு – சேவை வரியை’ (ஜிஎஸ்டி) சீர்திருத்தி அதன் வகைகளைக் குறைத்திருக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக வெவ்வேறு அரசியல் கட்சிகள், வர்த்தகத்துறையினர், நிறுவனங்கள், (நான் உள்பட) பல தனியாள்களும் வலியுறுத்திவந்தபடி புதிய வரி விகிதங்கள் ‘எளிமையான’, ‘நல்ல’ வரி விகிதங்களாகக் குறைந்திருக்கின்றன.
‘அரசமைப்புச் சட்ட (122-வது திருத்த) மசோதா’ மீது 2016 ஆகஸ்டில் நடந்த விவாதத்தின்போது நாடாளுமன்ற மாநிலங்களவையில் பங்கேற்றேன். அப்போது நான் பேசியதிலிருந்து சில பகுதிகள்:
“பொது சரக்கு சேவை வரியைக் கொண்டுவரும் எண்ணத்தை முதலில் வெளியிட்டது (காங்கிரஸ் தலைமையிலான) ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி’ (யுபிஏ) அரசுதான் என்பதை நிதியமைச்சர் முதலில் ஒப்புக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மக்களவையில் நிதிநிலை அறிக்கை தொடர்பான உரையில் 2005 பிப்ரவரி 28-இல் பொது சரக்கு சேவை வரியைக் கொண்டுவரும் உத்தேசம் குறித்து தெரிவிக்கப்பட்டது.
“ஐயா, இதில் நான்கு பெரிய பிரச்னைகள் இருக்கின்றன…
“நான் இப்போது மசோதாவின் முக்கியமான பகுதிக்கு வருகிறேன்… இது வரி விகிதங்கள் பற்றியது. அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகரின் அறிக்கையிலிருந்து சில பகுதிகளை வாசிக்கிறேன்… ‘மறைமுக வரி’ தொடர்பாக நாம் நடவடிக்கைகளை எடுக்கிறோம் என்பதை தயவுகூர்ந்து கவனத்தில் வையுங்கள். எந்தவொரு மறைமுக வரியும், ஏழைகள் மீது சுமையை அதிகரிக்கும் தன்மையைக் கொண்டது. மறைமுக வரியானது ஏழை – பணக்காரர் என்று இருவருக்குமே சம அளவில்தான் இருக்கும்… முதன்மைப் பொருளாதார ஆலோசகரின் அறிக்கை கூறுகிறது: “உயர் வருமான நாடுகளில் பொது சரக்கு சேவை வரியின் விகிதம் சராசரியாக 16.8% ஆக இருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த சராசரி 14.1%. எனவே, உலக அளவில் 190 நாடுகளுக்கும் மேல் பொது சரக்கு, சேவை வரி விகிதம் 14.1% முதல் 16.8%-க்குள் இருக்கிறது…
“வரி விகிதங்களை நாம் குறைவாக விதிக்க வேண்டும். அதே சமயம் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் வரி வருவாய் குறைந்துவிடாமலும் பாதுகாக்க வேண்டும்… இதற்காக ‘வருவாய் இழப்பில்லாத வரி விகிதம்’ எது என்பதை அறியும் செயலில் ஈடுபடுகிறோம்” என்றார்.
“அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் - நிபுணர்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனை கலந்து, மாநிலங்களுக்கு வருவாய் குறையாத வரி விகிதம் 15% முதல் 15.5% வரையில் இருக்க வேண்டும் என்று அறிந்து கொண்டார்; ஆனால் நிலையான வரி விகிதம் 18% ஆக இருக்கட்டும் என்று அரசுக்குப் பரிந்துரை செய்தார். இந்த 18% என்ற வரி விகித அளவை காங்கிரஸ் கட்சி எங்கிருந்தோ கண்டுபிடித்துக் கூறவில்லை, இது உங்களுடைய (அரசின்) அறிக்கையில்தான் இருக்கிறது…
“…மக்களுக்காக யாராவது பேசியாக வேண்டும். மக்களுடைய பெயரால் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், உங்களுடைய தலைமைப் பொருளாதார ஆலோசகரே பரிந்துரைத்தபடி, பொது சரக்கு வரி விகிதம் 18% என்ற அளவுக்கு மேல் போகவே கூடாது…
“அறிக்கையின் பாராக்கள் 29, 30, 52, 53 ஆகியவற்றைப் படியுங்கள். அது வெளிப்படையாகவே 18% என்ற வரி விகிதத்துக்கு ஆதரவாக வாதிடுகிறது… 18% என்ற வரி விகிதம் ஒன்றிய – மாநில அரசுகளின் வரி வருவாயைக் குறையாமல் பாதுகாக்கும், வசூலிப்பதற்கு மிகவும் திறமையானதாக இருக்கும், விலைவாசியை (பணவீக்கம்) அதிகப்படுத்திவிடாது, வரி ஏய்ப்புக்கும் இடம் தராது, அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்வார்கள்” என்கிறது. சரக்கு, சேவைகள் மீது 24%, 26% விகிதங்களில் வரி விதிப்பதாக இருந்தால் ஜிஎஸ்டி மசோதாவே எதற்கு?...
“இறுதியாக, வரி மசோதாவில் ஏதேனும் ஒரு விகிதத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். நான், என்னுடைய கட்சியின் சார்பில் உரத்தும் தெளிவாகவும் கோருகிறேன், பெரும்பாலான சரக்கு – சேவைகள் மீதான வரி விகிதம், அதிலும் குறிப்பாக 70%-க்கும் அதிகமான சரக்கு - சேவைகள் மீதான வரி விகிதம் 18% என்ற அளவுக்கு அதிகமாக இருக்கவே கூடாது; தரம் அதிகமில்லாத சரக்குகள் மீதான வரி விகிதங்களும் சிலவற்றுக்கான குறைந்த வரி விகிதங்களும் இந்த 18% என்ற அளவைப் பொருத்து நிர்ணயிக்கப்படட்டும்…”
இன்றைக்குப் பேசும் அதே குரலில்தான் 2016-லும் பேசினேன். வரி விகிதங்கள் சீரமைக்கப்பட வேண்டும், அதிலும் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை அரசும் இப்போது ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் பொது சரக்கு சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதிகபட்ச வரி விகிதம் 18% தான் என்று முடிவு செய்துவிட்டால் பெருமளவுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படும், அதிலும் குறிப்பாக மாநில அரசுகளுக்குரிய பங்கில் இழப்பு அதிகமாகிவிடும் என்று (ஒன்றிய) அரசு வாதிட்டது. அது பொருளற்ற அச்சம். இப்போது அரசே 5% - 18% என்ற இரு விகிதங்களை ஏற்றுள்ளது! வரி வருவாயை அதிகப்படுத்திக் கொள்ள ஒன்றிய அரசுக்குப் பல வழிகள் உள்ளன; மாநில அரசுகளுக்கு வரி வருவாயின் அளவு குறைந்தால் அதை ஒன்றிய அரசு ஈடுகட்டுவதுதான் சரியான செயலாக இருக்க முடியும்.
கடந்த எட்டு ஆண்டுகளில், வெவ்வேறு ஜிஎஸ்டி வரி விகிதங்களைப் பயன்படுத்தி நுகர்வோரிடம் கடைசி பைசா வரை (ஒன்றிய) அரசு கறந்துள்ளது. பொது சரக்கு சேவை வரி அறிமுகம் செய்யப்பட்ட முதலாண்டில் (2017 ஜூலை முதல் 2018 மார்ச் வரையில்) அரசு ரூ.11 லட்சம் கோடி வசூலித்தது. 2024-25-ல் அது 22 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. நுகர்வோர் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தின் ஒவ்வொரு பைசாவையும் அரசு பொது சரக்கு சேவை வரியாக உறிஞ்சிகொண்டது, அதனால்தான் அதை இகழ்ச்சியாக ‘கப்பர் சிங் வரி’ (ஷோலே இந்தி திரைப்படத்தில் கப்பர் சிங் என்பவர் கிராமவாசிகளைக் கசக்கிப் பிழிந்து பணம் ஈட்டுவார்) என்று அழைத்தனர். பொது சரக்கு சேவை வரி விகிதங்கள் அதிகமாக இருந்ததால்தான் பல பண்டங்களின் நுகர்வு குறைவாக இருந்தது, ஏராளமான குடும்பங்கள் கடன் சுமையில் ஆழ்ந்தன. வரி விகிதங்களைக் குறைத்தால் நுகர்வு அதிகரிக்கும் என்பது ஆரம்பப் பொருளாதாரப் பாடம்.
பற்பசை, கூந்தல் தைலம், வெண்ணெய், சிறு குழந்தைகளுக்கான நேப்கின்கள், பென்சில்கள், நோட்டுப் புத்தகங்கள், டிராக்டர்கள், பாசனத் தெளிப்பான் கருவிகள் ஆகியவற்றுக்கு 5% ஜிஎஸ்டியே போதுமானது என்றால் கடந்த எட்டு ஆண்டுகளாக ஏன் அதிகமாக வசூலிக்கப்பட்டது? மக்கள் ஏன் வரம்பு மீறி வரி செலுத்த நேர்ந்தது?
வரி விகிதங்கள் குறைப்பு, சீர்திருத்தங்களின் தொடக்க நிகழ்வுதான். இன்னும் அரசு செய்ய வேண்டிய செயல்கள் பல இருக்கின்றன.
Ø அரசு இனி, ஒரேயொரு வரி விகித முறைக்கு - மாநில அரசுகள், உற்பத்தியாளர்கள், நுகர்வோரைத் தயார்படுத்த வேண்டும் (தேவைப்பட்டால் அதிக விதிவிலக்குகளை அளிக்கலாம்);
Ø பொது சரக்கு சேவை வரிகள் தொடர்பாக அர்த்தமில்லாமலும் குழப்பமான வார்த்தைகளாலும் எழுதப்பட்ட சட்டப் பகுதி, நடைமுறை விதி புத்தகங்களைத் தூக்கி எறிந்துவிட்டு நேரடியாக – எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் புதிதாக எழுத வேண்டும்;
Ø வரி செலுத்துவோர் எளிதாக பூர்த்தி செய்யவும் கணக்குகளை ஒப்படைக்கவும் வழிமுறைகளை எளிதாக்கிவிட்டு, அடிக்கடி கணக்குகளைத் தரும் தொல்லைகளை ஒழிக்க வேண்டும்;
Ø சிறு வியாபாரிகளும் கடைக்காரர்களும் பட்டயக் கணக்காரின் துணையோடுதான் பொது சரக்கு சேவை வரி படிவங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற இடர் நிறைந்த நிலையை மாற்ற வேண்டும்;
Ø ஜிஎஸ்டி சட்டத்தில் சிறைவாசம் உள்ளிட்ட தண்டனைச் சட்ட அம்சங்களை விலக்க வேண்டும்; வரி கணக்குகளை அளிப்பதிலும் செலுத்துவதிலும் வியாபாரிகள் செய்யும் தவறுகள் சாதாரண மனிதத் தவறுகள்தான் என்பதால் அவற்றுக்கு ரொக்க அபராதமே போதுமானது;
Ø பொருள்களைத் தயாரிப்போரும் வியாபாரிகளும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறவர்கள், அவர்களைக் குற்றவாளிகள் போல வரி வசூலிக்கும் அதிகாரிகள் பார்க்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
பொது சரக்கு சேவை வரி விகிதம் குறைப்பு தொடர்பாக உற்சாகமாகக் கொண்டாட பாரதிய ஜனதாவுக்கு உரிமை ஏதுமில்லை. அதற்கு மாறாக, கடந்த எட்டாண்டுகளாக மிகையாக வரி விதித்து சுரண்டியதற்காக, நாட்டு மக்கள் அனைவரிடமும் அது மன்னிப்பு கோர வேண்டும்; எஞ்சிய சீர்திருத்தங்களை அமல்படுத்த மேலும் எட்டாண்டுகள் ஆகாது என்று நம்புகிறேன்.