விமான விபத்து pt web
இந்தியா

ஏர் இந்தியா விமான விபத்து.. மத்திய அரசு முக்கிய நடவடிக்கை.. 3 மாதங்களில் வெளியாகும் தகவல்கள்

அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமான விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.

திவ்யா தங்கராஜ்

அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமான விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழு விமான விபத்துக்கு வழிவகுத்த காரணங்களை ஆய்வு செய்து எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து தொடர்பாக 3 மாதங்களில் விரிவான அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே ஜூன் 12 ஆம் தேதி நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து நாட்டையே உலுக்கியது. ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் தரையிலிருந்து கிளம்பிய 33 வினாடிகளில் விபத்திற்குள்ளானதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. லண்டன் கேட்விக் நகர் நோக்கி சென்ற இந்த விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 7 போர்ச்சுகீசிய நாட்டவர்கள் மற்றும் ஒரு கனடியன் உட்பட 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இருந்தனர்.

விபத்தில் உயிர் தப்பிய விஷ்வாஸ் குமார்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாட்டவரான விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும் எக்ஸிட் வழியாக குதித்து இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். விமானத்திலிருந்த 241 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி, விமானம் கீழே விழுந்தபோது, விமானத்தில் பயணிக்காத சிலரும் உயிரிழக்க நேரந்தது. இந்த விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வுப் பணியகம் விசாரித்து வருகிறது. தொடர்ச்சியாக பற்பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

உயர்மட்டக்குழு

இந்நிலையில் விபத்து குறித்து விசாரிக்க மத்திய அரசு உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளது. இந்த விமான விபத்து தொடர்பாக ஏர் இந்தியா மற்றும் போயிங் நிறுவனங்களால் நடத்தப்படும் பிற விசாரணைகளுக்கு, தற்போது அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு மாற்றாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுப்பதற்கும், விபத்துகள் நடக்கும் பட்சத்தில் அதனை கையாள்வதற்கும் SOPகளை(standard operating procedure) வகுப்பதில் இந்த குழு கவனம் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த SOP என்பது வழக்கமான செயல்பாட்டை செய்வதற்காக படிப்படியாக வகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் தொகுப்பாகும்.

உயர்மட்டக்குழு தொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், “விமானத் தரவு, காக்பிட் குரல் பதிவுகள், விமான பராமரிப்பு பதிவுகள் உள்ளிட்ட அனைத்து வகையான பதிவுகளையும் உயர்மட்ட குழு ஆய்வு செய்யும்” என்று தெரிவித்துள்ளது. அதேபோல விபத்துக்குப் பின் அந்த சூழ்நிலைகளைக் கையாளவும், இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கவும் தேவைப்படும் கொள்கை மாற்றங்கள் மற்றும் பயிற்சி குறித்து குழு பரிந்துரைக்கும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்குள் அறிக்கை

இந்த குழு மூன்று மாதங்களுக்குள் அல்லது செப்டம்பர் 13, 2025க்குள் அதன் அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் இயங்கும் இந்த குழுவில் விமானப் போக்குவரத்து செயலாளர் சமீர் குமார் சின்ஹா, உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் இணைச் செயலாளர், குஜராத் அரசின் உள்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்பு ஆணையத்தின் பிரதிநிதி, அகமதாபாத் போலீஸ் கமிஷனர், இந்திய விமானப்படை டிஜி (ஆய்வு மற்றும் பாதுகாப்பு), டிஜி சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம், டிஜி சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், உளவுத்துறை பணியக சிறப்பு இயக்குநர், இந்திய அரசின் தடய அறிவியல் சேவைகள் இயக்குநரகத்தின் இயக்குநர் மற்றும் விமானப் போக்குவரத்து நிபுணர்கள், விபத்து புலனாய்வாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் உட்பட தகுதியானவர்கள் எனக் கருதப்படும் வேறு எந்த உறுப்பினரும் உறுப்பினர்களாக இருப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.