Twins, 20 வயது மாணவர், 2 நாளில் திருமணம் முடித்த கணவர்.. விமான விபத்தில் சிதைந்த உயிர்களின் கனவுகள்!
குஜராத்திலிருந்து நேற்று (ஜூன் 12) லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த விமானம் மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதியது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். தவிர, விமானம் மோதிய குடியிருப்பில் இருந்த மருத்துவ மாணவர்களும் பலியாகி உள்ளனர். இந்த விபத்தின் மூலம் பலருடைய நம்பிக்கைகளும், கனவுகளும் சிதைந்து போயுள்ளன. அவர்களில் சிலருடைய வாழ்க்கையின் நிலை பற்றிய குறிப்புகளையும் கனவுகளையும் பிரபல ஆங்கில ஊடகமான ’இந்தியா டுடே’ புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. அதுகுறித்த பட்டியலை நாம் இங்கு பார்ப்போம்.
பலியான 20 வயது மாணவர்
இந்த விபத்தில் பலியான 20 வயது நிறைந்த ருத்ரா என்ற மாணவரும் ஒருவர். இவர், 1ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு மேற்படிப்புக்காக லண்டனுக்குச் சென்று கொண்டிருந்தார். அவர், கேடாவின் மஹேம்தாவாட்டில் வசித்து வந்தார். முன்னதாக, ருத்ரா கனடாவுக்கு விண்ணப்பித்திருந்தார், ஆனால் விசா கிடைக்காததால், லண்டன் மாணவர் விசாவிற்கு விண்ணப்பித்து அதைப் பெற்றார் எனக் கூறப்படுகிறது.
மணிப்பூர் விமானப் பணிப் பெண்கள் பலி
அடுத்து விமானப் பணியாளர்களில் மணிப்பூரைச் சேர்ந்த கொங்பிரைலட்பம் நங்கந்தோய் சர்மா ஒருவர். அவருடன் சிங்சன் லாம்னுந்தெம் என்பவரும் இருந்துள்ளார். இம்பால் மேற்கில் உள்ள பழைய லம்புலேனைச் சேர்ந்த லாம்னுந்தெம்மும், தௌபல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தோய் சர்மாவும், மாநிலத்தில் நடைபெற்று வரும் இன மோதல் காரணமாக காங்போக்பி மாவட்டத்தில் வசித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த நீரஜ் லாவானியா, தனது மனைவியுடன் விபத்தில் இறந்தார். அவர் வதோதராவின் ஃபெதர் ஸ்கை விகாஸ் காலனியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் ஆவார். அதேபோல், மகாராஷ்டிராவின் டோம்பிவ்லியைச் சேர்ந்த மற்றொரு விமான ஊழியரான ரோஷ்னி சோங்காரேவும் இந்த துயர விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆவார்.
Twinsகளுடன் குடும்பமே பலியான சோகம்
குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இந்த விபத்தில் பலியாகி உள்ளார். அடுத்து, ராஜஸ்தானின் பன்ஸ்வாராவைச் சேர்ந்த தம்பதியினர், தங்கள் மூன்று குழந்தைகளுடன் லண்டனுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பிரதிக் ஜோஷி, அவரது மனைவி கோமி வியாஸ், அவர்களது இரட்டை மகன்கள் பிரத்யுத் மற்றும் நகுல் மற்றும் அவர்களின் மூத்த மகள் மிராயா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அடுத்து, இந்த துரதிர்ஷ்டவசமான விமானத்தில் புதிதாக நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட ஒரு ஜோடியும் அடங்குவர். ஹர்திக்பாய் அவையாவும் அவரது வருங்கால மனைவி விபூதிபெனும் லண்டனில் வேலை செய்து படித்து வந்தனர்.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லாவைச் சேர்ந்த ரஞ்சிதாவும், இந்த விபத்தில் பலியானார். அவர் இங்கிலாந்தில் செவிலியராகப் பணிபுரிந்துள்ளார். அடுத்து, இந்தூரைச் சேர்ந்த ஹர்ப்ரீத் கவுர் ஹோரா என்ற பெண், தனது கணவரின் பிறந்தநாளைக் கொண்டாட லண்டனுக்குப் புறப்பட்டபோது இந்த விபத்தில் பலியாகி உள்ளார்.
முதல் பயண பெண் முதல் 2 நாளில் திருமணம் முடித்த கணவர் வரை பலி
இன்னொரு துயரமாக ஹிம்மத் நகரைச் சேர்ந்த பயல் காதிக் என்ற இளம் பெண், தனது முதல் விமானப் பயணத்திலேயே பலியாகி உள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த அவர், தனது முதலாளியின் சார்பாக லண்டனுக்குப் பயணம் செய்தபோது இந்த துயரம் நிக்ழந்துள்ளது. அடுத்து, தனது மனைவியின் இறுதிச் சடங்குகளைச் செய்ய லண்டனில் இருந்து வந்த 36 வயது அர்ஜுன் படோலியாவும் இந்த விபத்தில் பலியாகி உள்ளார்.
கடந்த ஜூன் 10ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட பவிக் மகேஸ்வரி என்ற ஆணும் இந்த விமான விபத்தில் பலியானார். பல ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்த பவிக், ஒவ்வோர் ஆண்டும் 15 நாட்கள் தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட வதோதராவுக்கு வருவார். ஆனால் இந்த முறை, அவர் லண்டனுக்குச் செல்வதற்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். அவரது மனைவி விரைவில் லண்டன் செல்லவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.