டெல்லி, பாஜக எக்ஸ் தளம்
இந்தியா

டெல்லி | நீடிக்கும் முதல்வர் ரேஸ்.. பதவியேற்பு விழா குறித்த முக்கியத் தகவல்!

டெல்லியின் அடுத்த முதலமைச்சர் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

தலைநகர் டெல்லிக்கு சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் அபார வெற்றிபெற்று அரியணை ஏற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை முடிந்து 10 நாட்கள் ஆன நிலையிலும் இன்னும் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த அறிவிப்புகள் வரவில்லை.

அதேநேரத்தில், இந்தப் பட்டியலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தோற்கடித்த புதுடெல்லி தொகுதி வேட்பாளரும் முன்னாள் எம்பியுமான பர்வேஷ் வர்மாவே முதல் இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர், முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் ஆவார்.

BJP

இவருக்கு அடுத்த இடத்தில் டெல்லி பாஜகவின் முன்னாள் தலைவரும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான மால்வியா நகர் எம்.எல்.ஏ சதீஷ் உபாத்யாய் உள்ளார். இவர்களைத் தவிர கட்சியின் மூத்த தலைவர் விஜேந்தர் குப்தா, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனக்புரி எம்.எல்.ஏ ஆஷிஷ் சூட் மற்றும் உத்தம் நகர் எம்.எல்.ஏ பவன் சர்மா ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன.

இதற்கிடையே இந்தப் பட்டியலில் பெண் எம்.எல்.ஏக்களின் பெயர்களும் அடிபடுவதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், டெல்லியின் அடுத்த முதலமைச்சர் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய முதல்வரின் பதவியேற்பு விழா பிப்ரவரி 20-ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்தப் பதவியேற்பு விழாவில் 200க்கும் மேற்பட்ட முன்னாள் மற்றும் தற்போதைய பாஜக எம்.பி.க்கள், அதன் கூட்டணிக் கட்சிகளால் ஆளப்படும் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், மேலும் அனைத்து முக்கிய மாநிலத் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அன்றைய தினம் முதல்வருடன் 8 அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என கூறப்படுகிறது.

பாஜக

முன்னதாக, பிரதமர் மோடி பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா பயணத்திலிருந்து திரும்பும் வரை டெல்லியின் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் பாஜக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிரதமர் தாயகம் திரும்பியதைத் தொடர்ந்து அதற்கான பணிகள் வேகம் பிடித்துள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 19ஆம் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பாஜக டெல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, புதிய முதல்வரைத் தேர்வு செய்வார்கள் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ”டெல்லியை ஆட்சி செய்ய பாஜகவில் ஆளில்லை என்பது தெளிவாகியிருக்கிறது” என முன்னாள் முதல்வர் அதிஷி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அதிஷி, ”தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்திட்ட 10 நாள்கள் ஆகிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பெயர்களை பிப். 9ஆம் தேதியே பாஜக அறிவித்து, வளர்ச்சிக்கான பணிகளை தொடங்கும் என்றும் மக்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், பாஜகவில் டெல்லியை ஆட்சி செய்வதற்கான ஆட்கள் இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது. 48 பேரில் ஒருவரையும் பிரதமர் மோடிக்கு நம்பவில்லை. பாஜகவிடம் தொலைநோக்கு பார்வையோ, திட்டமிடலோ இல்லை. அவர்கள் அனைவரும் டெல்லி மக்களை கொள்ளையடிப்பார்கள் என்று பாஜகவுக்கு தெரியும். அரசை நடத்த திறன் கொண்டவர்கள் யாரும் இல்லையென்றால், மக்களுக்கான பணிகளை எப்படிச் செய்வார்கள்” என விமர்சித்துள்ளார்.