டெல்லி | அடுத்த முதல்வர் யார்? போட்டியில் 4 பெண்கள்!
தலைநகர் டெல்லிக்கு சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் அபார வெற்றிபெற்று அரியணை ஏற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை முடிந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்பது பற்றிய பேச்சுகளே இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தப் பட்டியலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தோற்கடித்த புதுடெல்லி தொகுதி வேட்பாளரும் முன்னாள் எம்பியுமான பர்வேஷ் வர்மாவே முதல் இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர், முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் ஆவார். இவருக்கு அடுத்த இடத்தில் டெல்லி பாஜகவின் முன்னாள் தலைவரும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான மால்வியா நகர் எம்.எல்.ஏ சதீஷ் உபாத்யாய் உள்ளார். இவர்களைத் தவிர கட்சியின் மூத்த தலைவர் விஜேந்தர் குப்தா, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனக்புரி எம்.எல்.ஏ ஆஷிஷ் சூட் மற்றும் உத்தம் நகர் எம்.எல்.ஏ பவன் சர்மா ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன.
இதற்கிடையே இந்தப் பட்டியலில் பெண் எம்.எல்.ஏக்களின் பெயர்களும் அடிபடுவதாகச் சொல்லப்படுகிறது. பாஜகவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 48 சட்டமன்ற உறுப்பினர்களில் நீலம் பஹல்வான், ரேகா குப்தா, பூனம் சர்மா மற்றும் ஷிகா ராய் ஆகிய 4 பெண்களின் பெயர்களும் உள்ளன. நஜாஃப்கர் தொகுதியிலிருந்து முதல் பெண் எம்.எல்.ஏ.வாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நீலம் பஹல்வான், டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரான ரேகா குப்தா, வஜீர்பூரில் வெற்றி பெற்றுள்ள பூனம் சர்மா, மூத்த ஆம் ஆத்மி தலைவரும் முன்னாள் அமைச்சருமான சவுரப் பரத்வாஜை தோற்கடித்த ஷிகா ராய் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களில் யாராவது ஒருவர் பரிசீலனை செய்யப்பட்டு பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது.