பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசிப் நேற்று இரவு முதல் போரைத் தொடங்கியது. இதையடுத்து, இந்தியா அதற்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதுடன், பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை வழிமறித்து தகர்த்து வருகிறது. இந்தப் போர்ச் சூழலுக்கு மத்தியில் பல்வேறு போலிச் செய்திகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் இந்திய விமானங்கள் விபத்துக்குள்ளானதாக சீன நாட்டின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதன் உண்மைத் தன்மையைப் பரிசோதித்த இந்தியா, அந்த ஊடகத்திற்கு கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் - இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான போரில், சுகோய் விமானம் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகச் செய்திகள் சமூக வலைதளங்கில் பகிரப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதன் விமானி பிடிபட்டதாகவும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகங்கள் இந்தச் செய்தியைப் பரப்பியுள்ளன. ஆனால், இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்துள்ள இந்திய அரசாங்கம், இது போலிச் செய்தி எனத் தெரிவித்துள்ளது. மேலும், ’இந்திய விமானப்படையின் (IAF) என்ற இந்த சுகோய் SU-30MKI, மகாராஷ்டிராவின் புனே-அஹமத் நகர் நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள குல்வாடி கிராமத்தின் உண்ட்ரே வஸ்தியில் அக்டோபர் 14, 2014 அன்று விபத்துக்குள்ளானது’ என பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், அந்த விபத்து குறித்த படத்தையும் உண்மைச் சரிபார்ப்பு பகிர்ந்துள்ளது. அதேபோல், இந்தியாவில் அடுத்த 2-3 நாட்களுக்கு ஏடிஎம்கள் மூடப்படும் என்று கூறப்படும் மற்றொரு வதந்தியை (PIB) உண்மைச் சரிபார்ப்பு கண்டறிந்துள்ளது. ’இது பொய் என்று குறிப்பிட்ட பிஐபி, ஏடிஎம்கள் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும் என்றும், இதுபோன்ற சரிபார்க்கப்படாத கூற்றுகளைத் தவிர்க்க வேண்டும்’ எனவும் அது கேட்டுக் கொண்டுள்ளது.
இதேபோல், பாகிஸ்தானில் இருந்து பரப்பப்படும் பல தவறான கூற்றுகளை PIB மறுத்துள்ளது. மே 8ஆம் தேதி இரவு 10 மணி முதல் மே 9ஆம் தேதி காலை 6:30 மணி வரை குறைந்தது எட்டு வைரல் வீடியோக்கள் மற்றும் பதிவுகள் PIBஆல் உண்மைச் சரிபார்ப்பு செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களில் பலமுறை பின்னடைவுகளைச் சந்தித்த பாகிஸ்தான், போரை கட்டுப்படுத்த முயற்சிப்பதால், இதுபோன்ற தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறது என அது எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் பொய்த் தகவல்கள் குறித்து இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தான் தவறான தகவல்கள் அளித்து உலகை ஏமாற்ற முயற்சிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.