”பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான்” - வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதன்மூலம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் உருவாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம், தற்போது ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய எல்லைகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், ” ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்தும் பாகிஸ்தானின் பயங்கரவாதம் குறித்தும் மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்திருந்தார். இதுகுறித்து அவர், “இந்தியாவின் ட்ரோன்களை பாகிஸ்தான் தகர்த்ததாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது. இந்தியா மீதான ராணுவ தாக்குதலை மேலும் அதிகரித்தால் தக்க பதிலடி தரப்படும். இந்தியாவின் தாக்குதலால் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள்தான். இந்தியா போர் பதற்றத்தை ஏற்படுத்தவில்லை. பதிலடி மட்டுமே தருகிறது. இந்தியா தொடர்பாக பாகிஸ்தானில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து TRF என்ற அமைப்பின் பெயரை நீக்க பாகிஸ்தான் அழுத்தம் கொடுத்தது. பஹல்காம் தாக்குதலுக்கு TRF தான் பொறுப்பேற்றிருந்தது. பாகிஸ்தான் எப்போது உருவானதோ அப்போதே அவர்கள் பொய் சொல்ல ஆரம்பித்து விட்டனர். எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதை நாம் மட்டுமல்ல, ஐ.நா குழுவை சேர்ந்தவர்களும் நேரில் ஆய்வு செய்துள்ளனர். பாகிஸ்தான் பிரச்னையை 22ஆம் தேதி முதலில் தொடங்கியது. பாகிஸ்தான் தொடங்கிய பிரச்னைக்கு நாம் பதிலடிதான் கொடுத்து வருகிறோம். நாட்டின் பாதுகாப்புக்காக பதிலடி கொடுக்க வேண்டியது கட்டாயம். பயங்கரவாதிகளின் தலைவர்கள் யார்யார் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல்களை தற்போது வெளியிட முடியாது. அதற்கு இது சரியான நேரமல்ல" என்றார்.
தொடர்ந்து அவர், “பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் இல்லமாக பாகிஸ்தான் உள்ளது. பின்லேடன்கூட பாகிஸ்தானில்தான் தஞ்சம் அடைந்திருந்தார். உலகளாவிய பயங்கரவாதத்தின் மையம் என்ற பெயரைத்தான் பாகிஸ்தான் பெற்றிருக்கிறது. உலகில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் பாகிஸ்தானின் பங்கு உள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானை சேர்ந்த 2 அமைச்சர்கள் சில பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதை போல் பேசி இருந்தனர். பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்டவர்கள்தான் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் டிஎன்ஏ உள்பட முழு விவரங்களையும் பாகிஸ்தானிடம் கொடுத்துள்ளோம். ஆனால், இந்தியா அளித்த ஆதாரங்களுக்கு பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் கூட சில பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் கலந்துக்கொண்டு மரியாதை செலுத்தினர். குறிப்பாக பாகிஸ்தான் கொடியை உயிரிழந்த பயங்கரவாதிகள் மீது போர்த்தி அரசு மரியாதை வழங்கப்பட்டடதையும் பார்க்க முடிந்தது. பயங்கரவாதிகளுக்கு அரசு மரியாதை செலுத்துவது பாகிஸ்தானின் வழக்கமாக உள்ளது.
இந்தியாவின் நோக்கம் பயங்கரவாதிகளை தாக்குவது மட்டுமே, மதம் சார்ந்த இடங்களை நாம் தாக்கவில்லை. ஆனால், பாகிஸ்தானின் குறிப்பிட்ட மத வழிபாட்டுத் தலங்களை இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. ஆனால், பயங்கரவாத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. இந்தியாவின் பதில் நடவடிக்கை மீது வகுப்புவாத சாயம் பூச பாகிஸ்தான் முயற்சிக்கிறது. பாகிஸ்தானின் உள்நோக்கம் இந்தியாவில் வெற்றிபெற நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தற்போது அழிக்கப்பட்டுள்ள முகாம்களுக்கும், இந்திய எல்லையில் தாக்குதலுக்கு ஆளான பகுதிகளுக்கும் உறுதியான இணைப்பு உள்ளது. பாகிஸ்தான் பதிலடி கொடுப்பதாக கூறி எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்களை தான் பாதிக்கிறது. தாக்குதல் தொடர்பான நுட்பமான அம்சங்களை தற்போது வெளியிட முடியாது. ” எனத் தெரிவித்துள்ளார்.