பிரதமர் மோடி
பிரதமர் மோடி pt web
இந்தியா

EVM வழக்கு | "உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு I.N.D.I.A கூட்டணிக்கு கிடைத்துள்ள அறை" பிரதமர் மோடி

PT WEB

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு அறைவிட்டது போல அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி பாவம் செய்ததற்கு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

பீகாரின், Araria மற்றும் Munger மக்களவைத் தொகுதிகளில் பிரதமர் மோடி அடுத்தடுத்து பரப்புரை மேற்கொண்டார். அங்கு பேசிய அவர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோரின் இடஒதுக்கீடுகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திருடி அவர்களின் பிரியமான வாக்கு வங்கியான இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பார்ப்பதாக குற்றம்சாட்டினார்.

INDIA கூட்டணியினர் செய்த பாவம்

தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் பிற இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சியில் ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவரின் வாக்குகளை, வாக்குப்பதிவு மையங்களில் சூறையாடியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால், அவர்களின் பழைய விளையாட்டை விளையாட முடியவில்லை.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கையின்மையை உண்டாக்கியதன் மூலம், INDIA கூட்டணியினர் பாவத்தை செய்துவிட்டனர். உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறைந்தது போல அமைந்துவிட்டது” என்று பிரதமர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு வழங்கிவிட்டது. இதையே நாடு முழுவதும் செய்ய காங்கிரஸ் முயற்சிக்கிறது. இனி வரும் காலங்களில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் இடஒதுக்கீடுகளையும் காங்கிரஸ் சூறையாடிவிடும்” என்றார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸை சாடிய பிரதமர்

தொடர்ந்து மேற்குவங்க மாநிலம் Malda -விலும் பரப்புரை மேற்கொண்ட பிரதமர், “ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, 26 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை ரத்துசெய்துவிட்டது. இதனால், மேற்குவங்க இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரசும், இந்தியா கூட்டணித்தலைவர்களும், மக்கள் பாடுபட்டு உருவாக்கிய சொத்துகளை பறிக்கப்பார்க்கின்றனர்.

ஏழைகள், பட்டியலினப் பெண்களின் தாலிகளைக்கூட அவர்கள் விட்டுவைக்க மாட்டார்கள். இதுபற்றி திரிணாமூல் காங்கிரஸ் ஏன் வாய்திறப்பதில்லை. மேற்குவங்கத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அனுப்பும் நிதியை திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் சுருட்டிக்கொள்கின்றனர்” என்றும் குற்றம் சாட்டினார்.