மத்தியப் பிரதேசத்தின் டாமோ மாவட்டம் பதரியா நகரைச் சேர்ந்தவர், பிரின்ஸ் சுமன். முட்டை விற்பனையாளரான இவருக்கு, அரசுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆக ரூ.6 கோடி பாக்கி வைத்திருப்பதாக வருமான வரி (ஐடி) துறையிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. 2022ஆம் ஆண்டு டெல்லி மண்டலம் 3, வார்டு 33இல் சுமனின் பெயரில் ’பிரின்ஸ் எண்டர்பிரைசஸ்’ என்ற நிறுவனம் பதிவு செய்யப்பட்டதாக வருமான வரித் துறையின் அறிவிப்பில் தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனம் தோல், மரம் மற்றும் இரும்பு வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும், மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், மார்ச் 20 அன்று அனுப்பப்பட்ட நோட்டீஸில், வருமான வரித் துறை, மொத்தம் ரூ.49.24 கோடி நிதி பரிவர்த்தனைகளின் பில்கள், கொள்முதல் வவுச்சர்கள், போக்குவரத்து பதிவுகள் மற்றும் வங்கி அறிக்கைகள் போன்றவற்றைக் கோரியுள்ளது.
இதனால் அதிர்ச்சியில் இருக்கும் பிரின்ஸ் சுமன், ”நான் வண்டியில் மட்டுமே முட்டைகளை விற்கிறேன். நான் டெல்லிக்குச் சென்றதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
சுமனின் தந்தை ஸ்ரீதர் சுமன், "நம்மிடம் உண்மையில் ரூ.50 கோடி இருந்தால், அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க நாம் ஏன் சிரமப்பட வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்விவகாரம் குறித்து சுமனின் தனிப்பட்ட ஆவணங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக குடும்ப வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அவர், "யாரோ பிரின்ஸ் ஆவணங்களை மோசடியாகப் பயன்படுத்தியுள்ளனர். இந்த வழக்கை விசாரிக்க காவல்துறை மற்றும் வரி அதிகாரிகள் இருவரையும் அணுகியுள்ளோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்னைக்கு சுமனுக்கு மட்டுமல்ல. உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் ஜூஸ் விற்பனையாளரான எம்.டி. ரஹீஸுக்கும் ஏற்பட்டுள்ளது. அவருக்கு, ரூ.7.5 கோடிக்கு மேல் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2020-21ஆம் ஆண்டில் அவரது பெயரில் கோடிக்கணக்கான மதிப்புள்ள போலி பரிவர்த்தனைகள் நடந்ததாக நோட்டீஸ் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், அவர் அரசாங்கத்திற்கு ரூ.7,79,02,457 ஜிஎஸ்டி செலுத்த வேண்டியுள்ளது.
இதுகுறித்து ரஹீஸ், "இந்த அறிவிப்பு ஏன் வெளியிடப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஜூஸ் மட்டுமே விற்கிறேன். இவ்வளவு பணத்தை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை. அரசாங்கம் எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் ஒரு ஏழை. நான் ஒரு பொய் வழக்கில் சிக்க வைக்கப்படக்கூடாது. நாங்கள் ஐடி அதிகாரிகளை அணுகினோம், அவர்கள் எனது தனிப்பட்ட ஆவணங்களை யாரிடமாவது பகிர்ந்து கொண்டீர்களா என்று கேட்டார்கள். நான் அவற்றை யாருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று சொன்னேன்" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்காக கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை அளிக்க ரஹீஸின் தனிப்பட்ட ஆவணங்கள் மோசடியாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.