அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு பிஹார் மாநிலத்தில் இருப்பிட சான்று கோரி விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டுள்ள சம்பவம் கேட்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த சம்பவத்தை சிலர் சிரித்துக் கொண்டே கடந்துபோக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏன் தெரியுமா? பீகாரில் வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியலை தொடங்கி நடத்திவருகிறது தேர்தல் ஆணையம்.
போலி வாக்காளர்களை அடையாளம் காணவே இப்படியொரு நடைமுறையை தொடங்கியிருப்பதாக ஆணையம் ஆறுதல் சொன்னாலும், பிறப்பு சான்றிதழே பிரதானமான ஆதாரமாக கேட்கப்பட்டது. இதனால் பிகார் குடிமக்களாக இருந்தும் பலரின் பெயர் முன்பிருந்த வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. பிகாரைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் குடியுரிமை இழந்த சம்பவம் நாடாளுமன்றத்தையே முடக்கியது. இது வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறை போல தெரியவில்லை. குடியுரிமை சரிபார்ப்பு நடவடிக்கை போல் உள்ளது என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின. இந்நிலையில், இந்த SIRஆல் பல விநோத சம்பவம் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதாவது டாக் பாபு, டோகேஷ் பாபு என நாய்களின் பெயர்களை வைத்தும், சோனாலிகா ட்ராக்டர் என போஜ்புரி நடிகை ஒருவரின் புகைப்படத்தை வைத்தும் விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டு வந்துள்ளன. அந்த வரிசையில் தற்போது, சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் கிராமத்தில் தங்கியிருக்கும் டொனால்ட் ட்ரம்புக்கு இருப்பிட சான்று வேண்டுமென விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. ஃபிரடெரிக் கிறிஸ்ட் ட்ரம்ப் மற்றும் மேரி ஆன் மேக்லியோட்டின் மகனான ட்ரம்ப் என ஒரிஜினல் ட்ரம்பின் உண்மை விவரங்கள் அந்த விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கடந்த 29ஆம் தேதி ஆன்லைன் மூலம் சமர்பிக்கப்பட்ட இந்த விண்ணப்பத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் கடந்த 4ஆம் தேதி விண்ணப்பத்தை புறக்கணித்துள்ளனர். அத்தோடு வருவாய்த் துறை சார்பில் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இது SIR நடைமுறைக்கு எதிரான சிலரின் செயல் என மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை பேசுபொருளாக்கியுள்ளன. பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் மோசடியாக நடப்பதாகவும், வாக்குகளை திருடுவதையே இந்த நடைமுறை நோக்கமாக கொண்டது எனவும் காங்கிரஸ் தலைவர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளரோ, வெல்கம் டூ பிஹார் என ட்ரம்ப்பை வரவேற்பதாக பதிவிட்டுள்ளார். இந்த நடைமுறையிலிருந்து ராமரால் மட்டுமே நம்மை காக்க முடியுமென திரிணமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதிவிட்டிருக்கிறார்.
எந்த சஞ்சலமும் இல்லாமம் ட்ரம்ப் புகைப்படத்தை அப்படியே வைத்து விண்ணப்பம் செய்துள்ள அந்த குறும்புக்கார மர்ம நபருக்குதான் மொத்த பிஹார் போலீசும் வலை விரித்துள்ளது.