கர்நாடகாவில் தட்சினகன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் உள்ள தர்மஸ்தலா மிகவும் புனித யாத்திரை நகரமாக விளங்கி வருகிறது. மங்களூரிலிருந்து சுமார் 75 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்தக் கோயில் நகரம், ஒரு ஆன்மீக மையமாகவும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது. மேலும், இங்கு பிரசித்திபெற்ற மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பிரபலங்கள் முதல் சாதாரண பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில், அதாவது அதனருகேயே 100க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளின் உடல்கள் புதைக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் இவ்வாறு புதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள் நிர்வாண நிலையிலும், கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் அந்தக் கோவில் நிர்வாகத்தின்கீழ் 1995 முதல் 2014 வரை பணியாற்றிய தூய்மைப் பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம் (ஜூன்) 3ஆம் தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும், தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மைப் பணியாளர் மங்களூரு நீதிமன்றத்தில், ஆஜராகி நீதிபதி முன்பு விளக்கமும் அளித்துள்ளார். அப்போது அவர், தன்னுடன் சில எலும்புகளையும் கொண்டு வந்தார். அவர் கடந்த 1998 முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார். குறிப்பாக, இந்த பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக அவர் கூறி அதிர வைத்தார். மேலும், புனித நேத்ராவதி நதிக்கரையிலும் சில உடல்கள் புதைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, 2010ஆம் ஆண்டு 12-15 வயது நிரம்பிய பள்ளிச் சீருடையில் இருந்த மாணவி ஒருவரை அடக்கம் செய்ய வேண்டும் என தன்னை வறுபுறுத்தினர் எனத் தெரிவித்துள்ளார். அதேபோல், 20 வயது நிறைந்த அமிலம் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணும் அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். இந்த சம்பவம் கர்நாடகாவையே அதிர வைத்துள்ளது.
செல்வாக்குமிக்க ஒரு குடும்பத்தால் இந்தக் கோவில் நிர்வகிக்கப்படுவதால், இந்தக் குற்றச்சாட்டுகளால் குறித்து பல தசாப்தங்களாக அமைதி நிலவுகிறது. முன்னதாக, இதுதொடர்பாக புகார்கள் வைக்கப்பட்டும், அது அமைதியான நிலையில், தற்போது துப்புரவுத் தொழிலாளி ஆதாரங்களால் வைத்திருப்பதால், இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. தவிர, சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இதற்கு முன்பு, 2003ஆம் ஆண்டு தர்மஸ்தலத்திற்கு கல்லூரி பயணத்தின்போது காணாமல் போன முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவி அனன்யா பட்டின் குடும்பத்தினர் வைத்த புகாருடன் தற்போதைய புகாரும் சார்ந்து போவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், துப்புரவுத் தொழிலாளியின் சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடையாளம் தெரியாத பாதிக்கப்பட்டவர்களில் தனது மகளும் இருக்கலாம் என உறுதியாக நம்பும் சிபிஐயின் முன்னாள் ஸ்டெனோகிராஃபரான சுஜாதாவும் இதில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
”தோண்டி எடுக்கப்படும் உடல்களுக்கு முறையான இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களின் ஆன்மாக்கள் அமைதியடையும். மேலும் எனது குற்ற உணர்வும் குறையும் நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ள அந்த துப்புரவுத் தொழிலாளி, தனது சொந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மைனர் பெண், தனது மேற்பார்வையாளர்களுடன் தொடர்புடைய ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, 2014 டிசம்பரில் இரவோடு இரவாக தர்மஸ்தலத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். அண்டை மாநிலங்களில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிறகு, தற்போது திரும்பியுள்ளார். தற்போது வழக்கிற்கு ஒத்துழைப்பதாகவும், அடக்கம் செய்யப்பட்ட இடங்களைக் காட்டுவதாகவும், இதில் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களைக் கூற இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தக் கோயில் நிர்வாகம் ஒரு ஜெயின் ஹெக்கடே குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. தர்மஸ்தல கோயிலின் தற்போதைய பரம்பரை நிர்வாகியாக ராஜ்யசபா எம்.பி.யாக பரிந்துரைக்கப்பட்ட வீரேந்திர ஹெக்கடே உள்ளார். இதற்கிடையே இந்தக் குற்றச்சாட்டுகளை ஹூப்ளி-தர்வாட் மேற்குத் தொகுதியின் பாஜக எம்எல்ஏவான அரவிந்த் பெல்லாட் மறுத்துள்ளார். இதுகுறித்து இந்தியா டுடேவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “தர்மஸ்தலத்தில் செய்யப்படும் நல்ல பணிகளைப் பற்றி அறிந்த எவரும், கூட்டு அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதைப் புரிந்துகொள்வார்கள். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஏதேனும் இருந்தால், அரசாங்கம் அவற்றை விசாரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டுகளில் இளம்பெண்கள் மாயமானதாகக் கூறப்படுகிறது. அவர்கள் என்ன ஆனார்கள் என்ற விசாரணை, இன்றுவரை தீர்க்கப்படாமல் இருக்கிறது. குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களிடமே போலீசாரும், ஆளுமைமிக்கவர்களும் மிரட்டியதாகக் கூறி வழக்குகள் விசாரணையிலேயே உள்ளது. இதுகுறித்து, கர்நாடக மாநில மகளிர் ஆணையத் தலைவர் நாகலட்சுமி சவுத்ரி, ஜூலை 14 அன்று முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதிய கடிதத்தில், ’குடும்பங்கள் காணாமல் போனவர்கள் அல்லது இறப்புகள் குறித்து புகார் அளிக்கும்போது காவல்துறை பெரும்பாலும் போதுமான அளவு பதிலளிக்கத் தவறிவிடுகிறது’ என்ற குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்துள்ளார். மேலும், ஜூலை 16 அன்று வழக்கறிஞர்கள் குழு ஒன்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, ஒரு சிறப்பு விசாரணையை ஒரு பதவியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்று கோரி ஒரு மனுவைச் சமர்ப்பித்துள்ளது. மறுபுறம், போலீசாரும் இதில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆகையால், இந்த விவகாரம் மீண்டும் கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.