கர்நாடகா | திருமணத்திற்குப் பிறகு மதமாற்றம்.. மனைவி மீது கணவர் புகார்!
கர்நாடகாவின் கடக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷால் குமார் கோகவி. இவரும் தஹ்சீன் ஹோசமணி என்பவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வரை திருமணம் செய்துகொள்ளாமல் உறவில் இருந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 2024ஆம் தேதி தங்கள் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர். இருப்பினும், இந்தத் திருமணத்திற்குப் பிறகு ஹோசமணி, முஸ்லிம் வழக்கப்படி தன்னை மீண்டும் திருமணம் செய்துகொள்ளுமாறு விஷால் குமாரிடம் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, திருமண உறவில் அமைதியைப் பேண விரும்பிய விஷால் குமாரும், கடந்த ஏப்ரல் 25 அன்று முஸ்லிம் சடங்குகளின்படி திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில், அந்தத் திருமணச் சடங்கின்போது தனக்குத் தெரியாமல் தனது பெயர் மாற்றப்பட்டதாக விஷால் குமார் இப்போது குற்றஞ்சாட்டியுள்ளார். நிகழ்வின்போது ஒரு 'மௌல்வி' (முஸ்லீம் மதகுரு) தன்னை அறியாமல் மதம் மாற்றியதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே, விஷால் குடும்பத்தினர், இந்து சடங்குகளுடன் கூடிய திருமணத்திற்கு தயாராகி உள்ளனர். அதற்கு தஹ்சீன் ஹோசமணியும் ஆரம்பத்தில் சம்மதித்ததாகவும், பின்னர் அவரது குடும்பத்தினரின் அழுத்தத்தால் பின்வாங்கியதாகவும் விஷால் குமார் குற்றம்சாட்டியுள்ளார். தாம் இஸ்லாத்திற்கு மாறவில்லை என்றால், தன்மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்படும் என மிரட்டியதாகவும், ஹோசமணியும் அவரது தாயார் பேகம் பானுவும் தன்னை தொழுகை நடத்தவும் ஜமாத்தில் கலந்துகொள்ளவும் கட்டாயப்படுத்தியதாகவும் விஷால் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக விஷால் குமார் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.