செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
பிரசித்தி பெற்ற சபரிமலையில் சனி, ஞாயிறு விடுமுறை தினத்திற்குப் பின்பும் "தலையா... கடல் அலையா?" என்ற அளவிற்கு பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கிறது சபரிமலை. ஆனாலும் சிறப்பு ஏற்பாடுகளால் ஒவ்வொரு பக்தருக்கும் சாமி தரிசனம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காலம் கடந்த டிசம்பர் 30ம் தேதி கோலாகலமாக துவங்கியது.
இந்த பூஜைக்காலத்தின் பிரதானமாக ஜனவரி 14ம் தேதி மகர நட்சத்திரத்தன்று சபரிமலை சந்நிதியில் "மகரவிளக்கு" பூஜையும், பொன்னம்பல மேட்டில் "மகர ஜோதி" தரிசனமும் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ள நிலையில், பூஜைக்காலம் துவங்கியது முதல், பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், பக்தர்கள் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்திருந்தது. அந்த இரண்டு நாட்களிலும் சராசரியாக ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் தரிசனம் செய்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடுமுறை நாட்களை கடந்த பின்பும் நேற்று திங்கட்கிழமை அதிகாலையில் இருந்தே பக்தர்கள் வெள்ளத்தில் திணறியது சபரிமலை. பம்பையில் இருந்து ஏழு கிலோமீட்டர் தூரம் மலையேறுவதில் துவங்கி, சன்னிதான நடைப்பந்தலில் இருந்து "இரு முடி" யோடு 18ம் படி ஏறுதல் வரை "தலையா... கடல் அலையா?" என்கிற அளவிற்கு காணும் இடமெல்லாம் சரண கோஷத்துடன் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வருகை அதிகரிப்பிற்கு ஏற்ப, முன்னேற்பாடாக 18ம் படியை ஏற்றி விடுவதில் 45 போலீஸார் மற்றும் அதிரடிப்படையினர் சுழற்சி முறையில் வேகம் கூட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
"இருமுடி" யோடு வரும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் 18ம் படியேறுவதில் ஏற்படும் தாமதம், நடுத்தர மற்றும் இளம் வயது பக்தர்கள் வரும் போது விரைவுபடுத்தப்பட்டு சமன் செய்யப்பட்டு வருகிறது, கருவறை முன்பு உள்ள வரிசைகளில் சுழற்சி முறையில் போலீஸார் பக்தர்களை கடத்தி விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்த இடத்திலும் பக்தர்கள் கடந்து செல்வதில் தாமதமும் தொய்வும் நேராவண்ணம் கவனம் செலுத்தும் சிறப்பு ஏற்பாடுகளால் பக்தர்கள் வெள்ளத்தில் சிறு அளவில் கூட நெரிசலும், பல மணி நேர காத்திருப்பும் தவிர்க்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பாகவும் விரைவாகவும் ஒவ்வொரு பக்தருக்கும் "சுப தரிசனம்" உறுதி செய்யப்பட்டு வருதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.