விஷால் கைகள் நடுங்கியது ஏன்? வெளியான உண்மை - மருத்துவர் அறிக்கை சொல்வதென்ன?
நடுங்கும் விஷால்... பரவிய வீடியோ... என்னதான் ஆச்சு விஷாலுக்கு? என்ற கேள்விகள் நேற்று முதல் சுற்றிக் கொண்டிருக்கிறது. விஷாலின் மருத்துவர் சொல்வது என்ன? பார்க்கலாம்...
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த மத கஜ ராஜா படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ம் தேதி வெளியாகவுள்ளது. 12 ஆண்டுகள் முன்பு வெளியாக வேண்டிய படம், பல்வேறு காரணங்களால் தடைபட்டு இப்போது வெளியாகவுள்ளது. அதற்காக படத்தின் PRE RELEASE EVENT நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் சுந்தர் சி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் நடிகர் விஷால் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு மேடையில் பேசும் போது விஷாலின் கைகள் நடுங்கிய படி மைக்கை பிடித்து பேசினார். அதே மேடையில் விஷாலுக்கு காய்ச்சல் என கூறினார் தொகுப்பாளர் டிடி.
இருந்த போதிலும் விஷாலின் கைகள் நடுங்கிய அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து விஷால் உடல்நிலையில் என்ன சிக்கல்? என கேள்வி எழுப்பினர். விஷாலின் நண்பரும், நடிகருமான உதயா, எக்ஸ் தளத்தில் விஷாலின் அந்த வீடியோ பற்றி குறிப்பிட்டு, அவர் விரைவில் நலம் பெற வாழ்த்தையும் பதிவு செய்திருந்தார். இப்படி நடிகர் விஷால் உடல்நிலை குறித்த தகவல்களும், அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்ற பதிவுகளும் அதிகமாக வர ஆரம்பித்தன.
தவறான தகவல் எதுவும் பரவக்கூடாது என விஷாலின் உடல்நிலை பற்றிய மருத்துவரின் குறிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த குறிப்பில், விஷாலுக்கு கடுமையான வைரல் காய்ச்சல் உள்ளது. எனவே அவர் அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவருக்கு முழுமையான ஒய்வு தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார் மருத்துவர் ராஜ்குமார். இதன் மூலம் விஷால் உடல்நிலை குறித்த தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது விஷால் தரப்பு.