amir khan muttaqi pt web
இந்தியா

ஆப்கன் அமைச்சர் நிகழ்வில் பெண் செய்தியாளர்களுக்கு மறுப்பு.. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விளக்கம்

டெல்லியில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் செய்தியாளர்கள் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

பாகிஸ்தான் உடனான உறவு சீர்கெட்டுள்ள நிலையிலும், இந்தியா உடனான நட்பு வலுப்பெற்று வரும் நிலையிலும் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி டெல்லி வந்துள்ளார்.

afghan minister press meet

டெல்லி வந்த அமிர் கான் முத்தாகி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முத்தாகி பங்கேற்றார். இதற்கு பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்கள் பெண்களின் உரிமைகளை மறுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் டெல்லி நிகழ்விலும் பெண் செய்தியாளர்கள் அனுமதிப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பெண்களுக்கு ஆதரவாக இருப்பதில் பலவீனமானவர் என பிரதமர் மோடியை சாடியுள்ளார். பெண்களுக்கு வலிமை அளிப்பது குறித்து உரத்த குரலில் பேசியதெல்லாம் வெற்றுப்பேச்சு என்று பிரதமர் மோடி நிரூபித்துள்ளதாகவும் ராகுல் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் பத்திரிகையாளர்களும் செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்திருக்க வேண்டும் என கூறியுள்ளார். இச்செயல் பேரதிர்ச்சி தருவதாக கூறியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்திய மகளிர் பத்திரிகையாளர் குழு (IWPC) பெண் செய்தியாளர்களைத் தவிர்த்தது பாகுபாடானது என்றும், வியன்னா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் தூதரக சலுகைகளின் அடிப்படையில் அதனை நியாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாததில் மத்திய அரசுக்கு தொடர்பில்லை என்று வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகி, ஆப்கானிஸ்தானியர்களின் வீரத்தை சோதிக்காதீர்கள் என பாகிஸ்தானை எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரீக் இ பாகிஸ்தான் முகாம்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய மண்ணிலிருந்து இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது கவனம் பெறுகிறது. எங்கள் வீரம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் அமெரிக்காவிடமும் நேட்டோவிடமும் ரஷ்யாவிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும் என்றும் அமிர் கான் முத்தாகி கூறியுள்ளார்.

இதற்கிடையே, செய்தியாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிகையாளர்கள் தடை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, முத்தகி கலந்துகொண்ட நிகழ்ச்சியின் ஊடகப் பொறுப்பாளரான அஷ்ரப் உஸ்மானி நிராகரித்திருக்கிறார். யார் கலந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து எவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.