லாலு பிரசாத் யாதவ் web
இந்தியா

பிகார் | வேலைக்கு நிலம் லஞ்சமாகப் பெற்ற விவகாரம்.. லாலு பிரசாத் யாதவ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு!

ரயில்வேயில் வேலை பெற்றுத் தருவதற்காக லஞ்சமாக நிலங்களைப் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

PT WEB

லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தபோது, 'குரூப்-டி' பணியிடங்களில் ஆட்களை நியமிப்பதற்கு நிலம் லஞ்சமாகப் பெற்றதாக சிபிஐ விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கில், லாலுவின் குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல், சமீபத்தில் நடந்து முடிந்து இருக்கிறது. அந்தத் தேர்தலில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 202 இடங்களை வென்று 10வது முறையாக முதலமைச்சர் அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஆரம்பித்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான கூட்டணி, லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் போட்டியிட்டு வெறும் 35 இடங்களை மட்டுமே வென்றது.

லாலு பிரசாத் யாதவ்

இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வேயின் 'குரூப்-டி' பணியிடங்களில் ஆட்களை நியமிப்பதற்கு, விண்ணப்பதாரர்களிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலங்கள் லாலுவின் மனைவி ராப்ரி தேவி, மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் அவரது மகள்களின் பெயர்களில் நேரடியாகவோ அல்லது அவர்களின் நிறுவனங்கள் மூலமாகவோ மாற்றப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, அவர்கள் மீது குற்றச்சதி, மோசடி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, லாலு பிரசாத் யாதவ் தரப்பு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம்

இந்நிலையில் இதுகுறித்தான வழக்கு இன்று, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்குத் தடை விதிக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் மறுத்துவிட்டது. மாறாக, இது குறித்து பதில் அளிக்குமாறு சிபிஐ-க்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் லாலுவின் குடும்பத்தினர் மீதான இந்த ஊழல் வழக்கு விசாரணை தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.