பினாய் விஸ்வம், பினராய் விஜயன் pt web
இந்தியா

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்த கேரளா... அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் !

கூட்டணிக் கட்சிகளிடம் கலந்தாலோசிக்காமல் அவசரமாக பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கேரள அரசு இணைந்திருப்பது கூட்டணி அறத்தை மீறிய செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலர் பினாய் விஸ்வம் கூறியுள்ளார்.

PT WEB

கேரளா பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தது, மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரள அரசின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் நிதி பெறுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கேரள கல்வித்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

மத்திய அரசு கடந்த, 2022 ஆம் ஆண்டு இந்திய முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 14 ஆயிரத்து 500 பள்ளிகளை தேர்ந்தெடுத்து அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பி.எம் ஸ்ரீ என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. மேலும், இத்திட்டத்திற்காக 60 சதவீத நிதியை மத்திய அரசும், மீதம் உள்ள 40 சதவீதத்தை மாநில அரசும் ஏற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு கட்டுப்பாடு ஒன்றையும் விதித்திருந்தது. அதன்படி, பி.எம் ஸ்ரீ திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கை ( NEP) 2020 ன் படியே கல்வித்திட்டம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திடாமல் இருந்து வந்தன.

பிஎம் ஸ்ரீ திட்டம்

இந்நிலையில், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சேர வேண்டிய கல்விக்கான நிதியை மத்திய அரசு கொடுக்காமலேயே இருந்து வருகிறது. தமிழக எம்.பி-க்கள் பலமுறை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியும் மத்திய அரசு அதன் உறுதியான நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. தேசியக் கல்விக்கொள்கையில் இணைந்தால்தான் மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்குமென்றால் எங்களுக்கு நிதியே தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் தமிழ்நாடு இருந்து வருகிறது.

இந்நிலையில்தான், தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ கடுமையாக எதிர்த்து வந்த கேரள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசாங்கம், தேசிய கல்விக்கொள்கையின் ஒரு பகுதியாகவுள்ள பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையடுத்து, பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தது குறித்து கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறும்போது, “ மத்திய அரசின் நிதி நிறுத்திவைக்கப்பட்டதால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 40 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பாஜக அரசு நிறுத்தி வைத்திருந்த 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கல்வி நிதியைப் பெறுவதற்கான வியூகமாகவே பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தன் மூலம் தேசிய கல்விக் கொள்கையை கேரள அரசு ஏற்றுக்கொண்டதாக பொருள் அல்ல” எனவும் விளக்கமளித்துள்ளார்.

சிவன் குட்டி

காங்கிரஸ் விமர்சனம்

பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணையும் கேரள அரசின் முடிவை மாநில எதிர்க் கட்சியான காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதன் மூலம் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஓரம் கட்டியிருப்பதாகவும் இடதுசாரி கூட்டணியில் நிலவும் ஆழமான பிளவை இது வெளிப்படுத்துவதாக கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறியுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் சதீசன் கூறியுள்ளார். பிஎம்ஸ்ரீ பள்ளி தொடர்பான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு வழிகாட்டுதலை அக்கட்சியின் கேரள மாநிலப் பிரிவு அலட்சியம் செய்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி !

கூட்டணிக் கட்சிகளிடம் கலந்தாலோசிக்காமல் அவசரமாக பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கேரள அரசு இணைந்திருப்பது கூட்டணி அறத்தை மீறிய செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலர் பினாய் விஸ்வம் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு கேரளாவை ஆட்சி செய்துவருகிறது. பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைவது தேசிய கல்விக் கொள்கையை கேரளாவில் அமல்படுத்த வழிவகுக்கும் என்று ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்திய மாணவர் சங்கம் (கேரளா)

மேலும், ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கமும் கேரள அரசின் முடிவை எதிர்த்து போராட்டங்களை நடத்திவருகிறது. இந்நிலையில், மூன்று ஆண்டுகளாக பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாமல் இருந்து வந்த கேரளா தற்போது இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கேரளா இணைந்ததன் மூலம், தற்போது தமிழ்நாடும், மேற்கு வங்கமும் மட்டுமே தற்போது இணையாமல் இருந்து வருகிறது.

இதற்கிடையே தமிழக அரசும் இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தின் மூலம் ஸ்மார்ட் வகுப்புகள், டிஜிட்டல் நூலகம், டிஜிட்டல் ஆய்வகம், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய மைதானம், இன்னோவேஷன் கவுன்சில் போன்ற வசதிகளுடன் கூடிய முன்மாதிரிப் பள்ளிகளாக அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று தனது எக்ஸ் தளப் பதிவில் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். உங்கள் கம்யூனிஸ்ட் சகாவான பினராயி விஜயன் ஆளும் கேரளாவைப் பார்த்து மனம் மாறினால் என்ன? என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.