அதானி நிறுவனத்தில் ரூ.33,000 கோடி எல்ஐசி முதலீடு... வாஷிங்டன் போஸ்ட் கட்டுரைக்கு எல்.ஐ.சி மறுப்பு !
அதானி குழுமத்தில் 33 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்தது குறித்து வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டதை எல்ஐசி மறுத்துள்ளது. எல்ஐசி, தனது முதலீட்டு முடிவுகள் நிர்வாகக்குழுவின் தீர்மானங்களின் அடிப்படையில் எடுக்கப்படுவதாகவும், வெளிப்புற அழுத்தங்கள் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் இதழ் தங்கள் ஆய்வுத் தகவல் எனக்கூறி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், அதானி நிறுவனம் முறைகேடான வழியில் தங்கள் நிறுவன பங்குகள் விலையை உயர்த்தியுள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்ததால் அதானி குழுமம் பங்குகள் மிகக்கடுமையாக சரிந்தன. இந்நிலையில், அதானி நிறுவனங்களுக்கு கைகொடுக்க அதில் 33 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய எல்ஐசியை மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் ஏற்பாடு செய்ததாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. மேலும், சில அதிகாரிகள் இதை தெரிவித்ததாக வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. மேலும் அதானி போர்ட் நிறுவனம் தனது கடனை அடைக்க 5 ஆயிரம் கோடி ரூபாய் பத்திரம் வெளியிட்ட நிலையில் அதையும் எல்ஐசிதான் வாங்கியதாக வாஷிங்டன் போஸ்ட் குற்றஞ்சாட்டியிருந்தது.
இந்நிலையில், அதானி நிறுவனத்தின் நலனுக்காக 30 கோடி எல்ஐசி பாலிசிதாரர்களின் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இவ்விவகாரம் குறித்து, “பிரதமரின் நெருங்கிய நண்பரான கௌதம் அதானியின் நிறுவனங்களை ஆதரிப்பதற்காக, எல்ஐசி போன்ற இந்தியாவின் மிக முக்கியமான பொது நிதி நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை வாஷ்ங்டன் போஸ்ட் கட்டுரை நிரூபிக்கிறது. இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்திய உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உள்ள நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு அல்லது வேறு ஏதேனும் ஒரு விசாரணை அமைப்பின் மூலம் விரிவான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
எல்.ஐ.சி மறுப்பு !
இந்நிலையில், அதானி குழும நிறுவனங்களில் மத்திய அரசின் நெருக்கடியின் பேரில் 33 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ததாக வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியை எல்ஐசி மறுத்து எக்ஸ் ஒரு பதிவிட்டுள்ளது. அதில், எல்ஐசியின் புகழையும் நற்பெயரும் குலைப்பதற்காகவும் இந்திய நிதித்துறையின் நம்பகத்தன்மைக்கு இழுக்கு ஏற்படுத்தவும் இது போன்ற தவறான தகவல் வெளியிடப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள் எதுவும் வெளியில் இருந்து வரும் அறிவுறுத்தல்கள், அழுத்தங்கள்படி எடுக்கப்படாது என்றும் நிர்வாகக்குழுதான் இம்முடிவுகளை எடுக்கும் என்றும் எல்ஐசி கூறியுள்ளது. இதன்படியே அதானி குழுமங்களிலும் உரிய நடைமுறைகளை பின்பற்றி முதலீடு செய்யப்பட்டதாகவும் எல்ஐசி விளக்கமளித்துள்ளது.

