தனியார் பேருந்து விபத்து.. அம்பலமான முறைக்கேடு.. நடந்தது என்ன?
தனியார் பேருந்து விபத்தில் 20 பேர் பலியான சம்பவத்தில் பேருந்து நிர்வாகம் முறைகெட்டில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. விபத்துக்கு முந்தைய அப்பகுதியின் சிசிடிவி காட்சிகள் பல்வேறு விஷயங்களை தெளிவுபடுத்துவதாக அமைகின்றன.
தனியார் பேருந்தில் 19 பயணிகள் மற்றும் ஒரு பைக் ஓட்டுநர் உயிரோடு எரிந்து பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அக்டோபர் 24 அன்று ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த காவேரி ட்ராவல்ஸ் என்னும் தனியார் பேருந்து, கர்னூல் சின்ன டேக்கூர் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் தீப்பிடித்தது. இச்சம்பவத்தில் 19 பயணிகள் மற்றும் பைக் ஓட்டுநர் உட்பட 20 பேர் பலியாகியுள்ளனர். பஸ் அதிவேகத்தில் சென்றிருந்தாலும், பைக்கின் மீது மோதிய பின்னும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால், பைக்கின் டேங்கில் இருந்து பெட்ரோல் கசிந்து, தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பேருந்து விபத்து தொடர்பாக விசாரணைகள் தொடங்கியபோது, பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் அம்பலமாகின. பஸ்ஸிற்கு சீட்டிங் கேரியர் (இருக்கை தாங்கி) அனுமதி மட்டுமே உள்ள நிலையில், அதன் உரிமையாளர் அதை படுத்துச் செல்லும் வசதி கொண்ட பெட்டி ஆக மாற்றியுள்ளார். பேருந்தின் மாற்றம் மற்றும் ஃபிட்னஸ் சான்றிதழை வழங்கியபோது, அதிகாரிகள் 43 இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்ல பர்மிஷன் வாங்கிவிட்டு, தொடர்ந்து வழக்கமான பயணிகளை ஏற்றிச் செல்லும் சேவையை பஸ் நிர்வாகம் நடத்தி வந்துள்ளது.
ஒரு வாகனத்தின் மீது பத்து சலான்கள் (அபராத ரசீதுகள்) இருந்தால், அதன் உரிமையாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்பது விதி. உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாகனத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற அரசு விதி இருந்தும், இந்த பஸ் மீது 16 சலான்கள் நிலுவையில் இருந்தபோதிலும், தடையின்றி சாலைகளில் சர்வீஸ் செய்து வந்துள்ளது. இந்த முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் பற்றிய தகவல்கள், விபத்தின் தீவிரத்தன்மைக்கு ட்ராவல்ஸ் நிர்வாகத்தின் அலட்சியமும் ஒரு முக்கிய காரணம் என்பதைக் காட்டுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.\
அதேபோல, பைக் ஓட்டுநரின் தவறும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், விபத்து நடப்பதற்கு சற்று முன்னர் உள்ள சிசிடிவி காட்சிகள் தற்போது கிடைத்துள்ளன. அந்த காட்சிகளில், அந்த இளைஞர் மது போதையில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான பைக் ஓட்டுநர், சம்பவத்திற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு மது போதையில் இருந்தவாறு ஒரு பெட்ரோல் பங்கிற்குச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகவே பைக் ஓட்டுநரின் அலட்சியமான செயலே இந்த கோர விபத்துக்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த பைக் ஓட்டுநர் 21 வயதான சிவ சங்கர் என்பதையும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

