‘தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் தமிழகத்தின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது’ என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியிருக்கிறார். இது தொடர்பாக மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறார்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்த விவாதங்கள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வரும் நிலையில் தொகுதி மறுசீரமைப்பு என்றால் என்ன? தமிழ்நாடு உட்பட தென்மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணம்? விரிவாகப் பார்க்கலாம்.
அரசியல் சாசனத்தின் பிரிவு 81, ‘ஒரு நாடாளுமன்ற தொகுதியில் 6.5 லட்சம் முதல் 8.5 லட்சம் வரை வாக்காளர்கள் இருக்கவேண்டுமென்கிறது (குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் விதிவிலக்கு). ஒரு எம்.பியால் அப்போதுதான் திறனுடன் தனது தொகுதியை நிர்வகிக்க இயலும். ஆனால், தற்போது இந்தியாவில் பல தொகுதிகளில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இந்த சிக்கலை தீர்ப்பதற்காகத்தான் தொகுதி மறுசீரமைப்பு என்கிற வழிமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றியமைக்கப்படும். இந்த நடைமுறை 1970-ல் இந்திய அரசு முன்னெடுத்த குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தால் சில ஆண்டுகள் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் 2000 ஆம் ஆண்டு மீண்டும் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்வது நிறுத்திவைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் 2026 இல் தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
இதற்கிடையில், 1971-ம் ஆண்டுக்கும் 2011-ம் ஆண்டுக்கும் இடையிலான காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் மக்கள் தொகை 138%, ராஜஸ்தானில் 166% என மக்கள்தொகை அதிகரித்தது. ஆனால், தமிழ்நாட்டில் 75%, கேரளத்தில் 56% மட்டுமே அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதன்படி, இப்போது இருக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் சில மாநிலங்களுக்கு அதிக மக்களவை தொகுதிகளும் சில மாநிலங்களுக்கு குறைவான தொகுதிகளும் செல்ல வாய்ப்பிருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் 2 வகையாக தொகுதி மறுசீரமைப்பு நடைபெற வாய்ப்பு உள்ளது.
இப்போது இருக்கும் மொத்த மக்களவை எண்ணிக்கையான 543 என்கிற எண்ணிக்கையை மாற்றம் செய்யாமல், 2011 மக்கள் தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட தென் மாநிலங்கள் 25 தொகுதிகளை இழக்கும். அதே நேரம் உத்திர பிரதேசம், பீகார் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட டாப் 5 மாநிலங்கள் கூடுதலாக 33 இடங்களை பெறும்.
உதாரணமாக தமிழ்நாட்டில் இப்போது மக்கள் தொகை பெருக்கம் என்பது கட்டுக்குள் உள்ளதால் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை 39 இல் இருந்து 29 ஆக குறைக்கப்படும். மறுபக்கம், உத்தர பிரதேசத்தில் மக்கள் தொகை பெருக்கம் அதிக அளவில் உள்ளதால் அங்குள்ள மொத்தம் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 80 இல் இருந்து 91 ஆக அதிகரிக்கப்படும்.
இப்போது இருக்கும் அனைத்து மாநிலங்களின் எண்ணிக்கையை குறைக்காமல் ஒட்டுமொத்த மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 790 ஆக அதிகரிப்பது. இதன் மூலம் பெரும்பாலான மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கும். உதாரணமாக தமிழ்நாட்டின் மக்களவை தொகுதி 39 இல் இருந்து 43 ஆக அதிகரிக்கும். உத்திர பிரதேச மக்களவை தொகுதி 80 இல் இருந்து 133 ஆக உயரும். கேரளா மாதிரியான சில மாநிலங்களைத் தவிர பெரும்பாலான மாநிலங்களின் எண்ணிக்கை இதன் மூலம் அதிகரிக்கப்படும் .
இப்போது இதில் சிக்கல் என்னவென்றால், இப்படி ஒரு சில மாநிலங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பது நாடாளுமன்றத்தில் மற்ற மாநிலங்களின் குரல்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது .
உதாரணமாக ஒட்டுமொத்த மக்களவை உறுப்பினர்களில் இப்போது உத்திர பிரதேசம் 14.73 சதவீதத்தை கொண்டுள்ளது . இது மறுசீரமைப்பு செய்யப்படும் போது 16% ஆக அதிகரிக்கும் . ஆனால், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7% இல் இருந்து 5% ஆக குறையும் வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களும், ஜார்கண்ட், ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் நாடாளுமன்றத்தில் குறைய வாய்ப்புள்ளது.
இதனால் இந்த மாநிலங்களின் கோரிக்கைகள் மதிப்பளிக்கப்படாமல் போகலாம். மத்தியில் ஆட்சியை பெற வடமாநிலங்களுக்கு மட்டும் அதிக கவனம் செலுத்தினாலே போதும் என்கிற நிலை உருவாகலாம். இந்த அடிப்படையில்தான் முதல்வர் ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பு குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.