நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 21-ஆம் தேதி மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் கடந்த இரண்டு நாட்களாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மக்களவை உறுப்பினர்கள் தங்களது வாதங்களை வைத்தனர். அவர்கள் உரையாற்றியது குறித்து இங்கு பார்ப்போம்.
மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் எம்பி:
”பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலையும், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிப்பதையும் ஒட்டுமொத்த நாடும் இந்த அவையும் கண்டிக்கின்றன. நாங்கள் முன்பும் பாகிஸ்தானைக் கண்டித்தோம்; இன்றும் அவர்களைக் கண்டிப்போம்; நாளையும் இது தொடர்ந்தால், நாங்கள் அவர்களைக் கண்டிப்போம். ஆனால் இங்கே, நாங்கள் அவர்களைக் கண்டிக்கிறோம். நீங்கள் அவர்களின் விருந்தில் கலந்துகொண்டு அவர்களைக் கட்டிப்பிடிக்கிறீர்கள். பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதில் அரசாங்கம் தனது தவறுகள் மற்றும் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும். பஹல்காம் பாதுகாப்பு குறைபாட்டிற்கு ஜம்மு காஷ்மீரின் துணை ஆளுநர் காரணம் அல்ல, உள்துறை அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்" என்று கார்கே கூறினார்.
கனிமொழி திமுக எம்பி:
”பயங்கரவாத தாக்குதலை நீங்கள் தடுத்திருக்க வேண்டாமா? பயங்கரவாதத்தால் இறப்பவர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை; அவர்களின் வம்சமே பாதிக்கப்படுகிறது. முந்தைய பயங்கரவாத தாக்குதலில் நீங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா? பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தடுக்க எப்படித் தவறினீர்கள்? பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு புலனாய்வு அமைப்புகள் என்ன செய்துகொண்டிருந்தன.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்ற தொனியில் அமைச்சர் அமித் ஷா பேசினார். தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல. தேசத்தை எந்த வகையிலும் தமிழ்நாடு விட்டுக் கொடுத்ததில்லை. நாங்கள் இந்த தேசத்தோடுதான் நிற்கிறோம்!அனைத்துக் கட்சி கூட்டத்தில்அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு ஆதரவாக நின்றோம். ஆனால் நீங்கள் எங்களை எதிர்க்கிறீர்கள்.
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டின் பெருமைகள் மற்றும் கலாசாரம் மீது திடீர் அன்பு, பாசம் எல்லாம் வந்துவிடுகிறது. ஆனால் கீழடி அறிக்கைக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்க மறுக்கிறது. இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்குகிறது. பிரதமர் மோடி சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வந்துள்ளார். சோழன் கங்கையை கொண்டான், கங்கையை வென்றான், தமிழன் ஒருநாள் கங்கையை வெல்வான் என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தியா – பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று 26 முறை கூறிவிட்டார் ட்ரம்ப். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கருத்தை இந்தியா நேரடியாக மறுக்காதது ஏன்? இதுதான் உங்கள் வெளியுறவுக் கொள்கையா? பாகிஸ்தான் போர் மட்டுமல்ல, அதற்கு மேலும் நிறைய இருக்கிறது. மக்களின் பாதுகாப்புக்கு நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
அ.ராசா, திமுக எம்பி.
”பஹல்காம் தாக்குதலுக்காக பிரதமர் முதல் பாஜக எம்.பி., வரை ஒருவர் கூட வருத்தம் தெரிவிக்கவில்லை. குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாலே வெற்றி எனக் கூறக் கூடாது. உளவுப் பிரிவும், RAW அமைப்பும் பல முன்னெச்சரிக்கைகளைக் கொடுத்த பிறகும் அரசு எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யவில்லை. நாட்டை ஆளும் தகுதி பாஜகவுக்கு இல்லை. அமெரிக்க துணை அதிபர் இந்தியப் பிரதமரை அழைத்து, தாக்குதல் நடக்கப் போவதாகக் கூறுவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. அண்டை நாடுகளுடன் போர் ஏற்பட்டபோது நேரு எதையும் மறைக்கவில்லை. ஆனால் பாஜக மறைக்கிறது. எந்த விவகாரம் ஆனாலும் நேரு, இந்திரா, காங்கிரஸ் எனப் பேசுவதே பாஜகவினரின் வாடிக்கையாக உள்ளது” என்றார்.
சயானி கோஷ், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி
”பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க இது சரியான வாய்ப்பாக அமையவில்லையா? பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கவும், அவர்களின் கொடியில் சந்திரன் இருந்தாலும், நமது கொடி சந்திரனில் (நிலவில்) உள்ளது என்பதை அவர்களுக்கு நினைவூட்டவும் இது சரியான வாய்ப்பாக அமையவில்லையா?" எனக் கேள்வி எழுப்பினார்.