ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, யங் இந்தியா திறன் பல்கலைக்கழகம் அமைக்க அதானி குழுமத்தலைவர் கௌதம் அதானி 100 கோடி ரூபாய் நன்கொடையை அறிவித்திருந்ததாக கூறினார்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பங்களிப்பின் ஒரு பகுதியாக இந்த நன்கொடையை தருவதாக அதானி தெரிவித்திருந்ததாக அவர் கூறினார். ஆனால் இந்த நன்கொடையை ஏற்றுக்கொண்டால், தெலங்கானா அரசுக்கும், முதலமைச்சருக்கும் சாதகமாக செயல்படுவது போன்ற தேவையற்ற பேச்சுகளை எழுப்பும் என்பதால் அந்த நன்கொடையை ஏற்க மறுப்பதாக தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் உட்பட எந்த நிறுவனத்திடம் இருந்தும் தெலங்கானா அரசு ஒரு ரூபாய் கூட இதுவரை ஏற்கவில்லை என்று கூறியுள்ளார். தெலங்கானா அரசின் மரியாதையை சீர்குலைக்கும் விதமான எந்த வகை பேச்சும் எழுவதைத் தானோ, தனது அமைச்சரவையோ விரும்பவில்லை என்றும், அதனால்தான் அதானி குழுமத்துக்கு தனது அரசின் சார்பில் கடிதம் எழுதியுள்ளதாக ரேவந்த் ரெட்டி கூறினார். பல்கலைக்கழகத்துக்கு 100 கோடி ரூபாயை அனுப்ப வேண்டாம் என்று தெளிவாக கடிதம் எழுதியிருப்பதாகவும் தற்போதைய சூழலில், தெலங்கானா அரசு நன்கொடையை ஏற்க விரும்பவில்லை என்றும் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.