ஷக்சகம் பள்ளத்தாக்கு X
இந்தியா

ஷக்சகம் பள்ளத்தாக்கு உரிமை கோரல்: இந்தியா - சீனா இடையே வலுக்கும் மோதல்!

ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதியான ஷக்சகம் பள்ளத்தாக்கு தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

PT WEB

ஜம்மு - காஷ்மீரின் ஷக்சகம் பள்ளத்தாக்குப் பகுதியில் சீனா உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. இதற்கு இந்தியா தரப்பிலிருந்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், "ஷக்சகம் பள்ளத்தாக்கு சீனாவின் நிலப்பரப்பு. எங்களது சொந்த நிலத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எங்களுக்கு முழு உரிமை உள்ளது" என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் சமீபத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாவ் நிங்

இதற்கு, ”ஷக்சகம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. 1963-ஆம் ஆண்டு சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான எல்லை ஒப்பந்தம் சட்டவிரோதமானது மற்றும் செல்லாது. இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது" என இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்லும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

காங்கிரசின் எதிர்ப்பு.!

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. மோடி அரசின் வெளியுறவு கொள்கை தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், "சீனாவின் அத்துமீறல்களைத் தடுக்க பிரதமர் மோடியின் 'சிவப்புக் கண்கள்' (வலுவான எதிர்ப்பு) எங்கே போயின?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

ஷக்சகம் பள்ளத்தாக்கு

ஷக்சகம் பள்ளத்தாக்கு

ஷக்சகம் பள்ளத்தாக்கு இந்தியாவின் சியாச்சின் பனிமலைப் பகுதிக்கு மிக அருகில் உள்ளது. இப்பகுதியில் சீனா சாலைகளை அமைப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. இந்த நிலப்பரப்பு இமயமலையின் காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இது வியூகரீதியாக மிக முக்கியமான பகுதியாகும், 1963-இல் பாகிஸ்தான் இந்தப் பகுதியைச் சீனாவிற்கு சட்டவிரோதமாக பரிசாக வழங்கியது, இதை இந்தியா தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.