சைதன்யா, பூபேஷ் பாகல் எக்ஸ் தளம்
இந்தியா

சத்தீஷ்கர் | மதுபான ஊழலில் ரூ.250 கோடி பெற்ற Ex முதல்வர் மகன்.. குற்றப்பத்திரிகை தாக்கல்!

சத்தீஸ்கரில் நடைபெற்றதாகக் கூறப்படும் மதுபான ஊழலில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் ரூ.200-250 கோடியைப் பெற்றதாக மாநில ஊழல் தடுப்புப் பணியகம்-பொருளாதார குற்றப் பிரிவு (ACB-EOW) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

Prakash J

சத்தீஸ்கரில் நடைபெற்றதாகக் கூறப்படும் மதுபான ஊழலில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் ரூ.200-250 கோடியைப் பெற்றதாக மாநில ஊழல் தடுப்புப் பணியகம்-பொருளாதார குற்றப் பிரிவு (ACB-EOW)தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது நடந்ததாகக் கூறப்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான ஊழலில், முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகலுக்கு ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி வரை பங்கு கிடைத்துள்ளதாக மாநில ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளன. சுமார் 3,800 பக்கங்கள் கொண்ட இந்த 7ஆவது துணை குற்றப்பத்திரிகையில், சைதன்யா பாகல் ஒரு முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். 2018-2023 காலகட்டத்தில் மாநில கலால் துறையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் மாமூல் வசூலிக்கும் ஒரு முறையற்ற அமைப்பை நிறுவுவதிலும், அதைப் பாதுகாப்பதிலும் சைதன்யா முக்கியப் பங்காற்றியதாகக் கூறப்படுகிறது. மதுபான தொழிலதிபர் திரிலோக் சிங் தில்லானுக்குச் சொந்தமான பல்வேறு நிறுவனங்கள் மூலம் அவர் தனது பங்கைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அதை வங்கி வழிகள் மூலம் தனது குடும்ப நிறுவனங்களுக்கு மாற்றி ரியல் எஸ்டேட் திட்டங்களில் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் தனது குடும்ப நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலமாகவும், வங்கி வழிகள் மூலமாகவும் மோசடிப் பணத்தில் பெரும் தொகையைப் பெற்று முதலீடு செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

சைதன்யா பாகல்

இந்த ஒட்டுமொத்த மதுபான ஊழலின் மதிப்பு ரூ.3,000 கோடிக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, கலால் வரி ஊழலின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3,074 கோடி என விசாரணையில் மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மேலும் விசாரணையில், இந்த தொகை ரூ.3,500 கோடியை தாண்டும் என்று தெரிகிறது.

அரசு அதிகாரிகளுடன் இணைந்து மதுபான விநியோகத்தில் முறைகேடு செய்து, அதன்மூலம் வரும் சட்டவிரோதப் பணத்தைச் சேகரிப்பதில் அவர் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டதாகப் புலனாய்வு அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. 2019 மற்றும் 2022க்கு இடையில் அப்போதைய முதல்வர் பூபேஷ் பாகேல் சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசாங்கத்தை வழிநடத்தியபோது இந்த ஊழல் திட்டமிடப்பட்டது. சத்தீஸ்கரில் அப்போது விற்கப்பட்ட ஒவ்வொரு மதுபான பாட்டிலிலிருந்தும் பணம் சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்டதாக பணமோசடி தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் சைதன்யா பாகல் மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த உயர் அதிகாரிகளையும் அமலாக்கத் துறை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சைதன்யா, பூபேஷ் பாகல்

இந்த கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த பூபேஷ் பாகல், “எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைக்க புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார். சத்தீஸ்கரில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்து. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, முந்தைய அரசின் மீதான ஊழல் புகார்கள் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பல உயர்அதிகாரிகளும்,தொழிலதிபர்களும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது முன்னாள் முதல்வரின் மகன் மீதான இந்தக் குற்றச்சாட்டு மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.