இந்தியாவின் மிகப் பெரும் வர்த்தகக்குழுமமான டாடாவில் மீண்டும் அதிகார மோதல் வெடித்துள்ளது.சந்திரசேகரனுக்கு மேலும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதற்கு, டாடா டிரஸ்ட் தலைவர் நோயல் டாடா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். டாடா குழுமத்தில் என்னதான் நடக்கிறது? விரிவாகப் பார்க்கலாம்...
டாடா டிரஸ்ட் தலைவர் நோயல் டாடாவுடனான மோதல் காரணமாக, தலைவர் பதவியில் நீடிக்கப்போவதில்லை என கடந்த ஆகஸ்ட் மாதம் சந்திரசேகரன் அறிவித்திருந்தார். இந்தச் சூழலில், அவருக்கு மீண்டும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் அளித்திருப்பது பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால், இயக்குநர் குழுவின் இந்த முடிவு சட்டவிரோதமானது என நோயல் டாடா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். டாடா குழுமத்தின் முக்கிய அமைப்புகள் டாடா டிரஸ்ட் மற்றும் டாடா சன்ஸ் ஆகும். டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ் எனத் தொடங்கி 26 நிறுவனங்கள் டாடா சன்ஸின் கீழ் பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ளன. இதன் தலைவராக 2017ஆம் ஆண்டு என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.
டாடா குடும்பத்தினர் அல்லாது வெளியே இருந்து ஒருவர் டாடா சன்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டது அதுவே முதன்முறை. ஆனால், இந்த டாடா சன்ஸின் 66 சதவீதப் பங்குகள் டாடா டிரஸ்ட் வசமே உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்தான் நோயல் டாடா. என்.சந்திரசேகரன், ஏர் இந்தியா மறுசீரமைப்பு, எலக்ட்ரிக் வாகனம் மற்றும் செமிகண்டக்டர் முதலீடுகள் மூலம் குழுமத்தைப் பல தளங்களில் விரிவாக்கியதுடன், குழும சந்தை மதிப்பை அபாரமாக உயர்த்தினார்.
இருப்பினும், அவரது செயல்பாடுகள் குறித்து நோயல் டாடாவுக்கு விமர்சனங்கள் இருந்தன. குறிப்பாக, டாடா சன்ஸைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான சந்திரசேகரனின் திட்டத்திற்கு நோயல் டாடா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துவந்தார். இதன் நீட்சியாகவே, 2027 பிப்ரவரிக்குப் பிறகு பதவியில் தொடரப்போவதில்லை என சந்திரசேகரன் முன்பு அறிவித்திருந்தார். இதனிடையே, விதிமுறைப்படி டாடா சன்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதால், நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் கட்டாயம் பட்டியலிட வேண்டிய சூழல் உருவானது.
பொதுப்பங்கு வெளியீட்டின்போது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறத் தொடர்ச்சியான தலைமை அவசியம் என்பதால், சந்திரசேகரனையே மீண்டும் தொடருமாறு நிர்வாகக் குழு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், டிரஸ்ட் பரிந்துரைத்த இயக்குநர்களின் பெரும்பான்மை ஆதரவின்றி எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானம் சட்டப்படி செல்லாது என நோயல் டாடா தெரிவித்துள்ளார். இதனால், சந்திரசேகரனின் தலைமை மற்றும் பங்குச் சந்தைப் பட்டியல் குறித்த சிக்கல் டாடா குழுமத்தில் தொடர்கிறது.