\
Tata
TataANI

நாட்டில் இருந்து வெளியே போங்க.. டாடா-வுக்கு அதிர்ச்சி தந்த கென்யா! பரபரப்பு பின்னணி என்ன?

கென்யாவில் டாடா நிறுவனத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Published on
Summary

கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ, கஜியாடோ மாகாணத்தில் நூற்றாண்டாக கனிம வளங்களை சுரண்டியும் உள்ளூர் மக்களுக்கு பயன் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில், இந்தியாவின் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் மகாடி சோடா கிளையை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளார். கண்ணாடி, இரசாயன ஆலைகளுக்காக புதிய முதலீட்டாளர்களை கொண்டு வந்து வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

செய்தியாளர் - கார்த்திகேயன்

கென்யா நாட்டின் அதிபராக இருக்கும் வில்லியம் ரூட்டோ, கஜியாடோ மாகாணத்திற்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவின் புகழ்பெற்ற 'டாடா கெமிக்கல்ஸ்' நிறுவனத்தின் கிளை நிறுவனமான 'மகாடி சோடா', கென்யாவில் தனது செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக அந்தப் பகுதியில் கனிம வளங்களை எடுத்து வருகிறது.

ஆனால், இவ்வளவு நீண்ட காலமாக ஒப்பந்த உரிமையை வைத்திருந்தும், உள்ளூர் மக்களுக்கோ அல்லது அந்த சமூகத்திற்கோ எந்தவித பயனும் கிடைக்கவில்லை என்பதுதான் கென்யா அரசின் இந்த உத்தரவுக்கு காரணமாக அமைந்துள்ளது. கஜியாடோ பகுதியில் இந்த நிறுவனம் இதுவரை எந்தவிதமான பெரிய தொழிற்சாலைகளையும் உருவாக்கவில்லை என்றும், உள்ளூர் இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகளை வழங்கவில்லை என்றும் அதிபர் ரூட்டோ பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

Kenya President
Kenya PresidentReuters

"உள்ளூர் வளங்கள் மட்டும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தொடர்ந்து பலனளிக்க வேண்டும், ஆனால் கஜியாடோ பகுதி மட்டும் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே இருக்க வேண்டுமா?" என்று அவர் அங்குள்ள பொதுமக்களிடம் நேரடியாகவே கேள்வி எழுப்பியுள்ளார்.

டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை வெளியேற்றுவதுடன் நின்றுவிடாமல், அந்தப் பொருளாதாரத்தை மேம்படுத்த மாற்றுத் திட்டங்களையும் கென்யா அரசு கையில் எடுத்துள்ளது. கஜியாடோ பகுதியில் கண்ணாடி மற்றும் இரசாயன உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்காக இரண்டு புதிய முதலீட்டாளர்களைக் கொண்டுவரப் போவதாக அதிபர் ரூட்டோ அறிவித்துள்ளார்.

Kenya
KenyaReuters

இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இந்தச் மோதல் திடீரென உருவானது அல்ல. கடந்த ஜூலை மாதத்திலேயே, அரசாங்கம் தனது மகாடி சோடா செயல்பாடுகளை முடக்கியுள்ளதாகவும், சோடா சாம்பல் (Soda Ash) ஏற்றுமதியை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் டாடா கெமிக்கல்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு நூற்றாண்டில் அதிவேகமாக வளர்ந்த ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனம், உள்ளூர் மக்களின் சமூக மேம்பாட்டைப் புறக்கணித்ததாக எழுந்த குற்றச்சாட்டு தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com