”ரத்தன் டாடா உயிருடன் இருந்திருந்தால்..” ஏர் இந்தியா இழப்பீடு குறித்து அமெரிக்கா வழக்கறிஞர்!
குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். மொத்தம் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளில் 100 பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக தணிக்கையில் தெரியவந்தது. மறுபுறம், விமான விபத்தில் இறந்த குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இழப்பீடு வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும், இழுபறி ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது.
இந்த நிலையில், ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதை அமெரிக்க வழக்கறிஞர் ஆண்ட்ரூஸ் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “அமெரிக்காவில்கூட, ரத்தன் டாடா யார் என்பது பற்றி எங்களுக்குத் தெரியும். அமெரிக்காவில் அவரது பணி நெறிமுறைகள் மற்றும் எளிமையாக இருப்பதிலும், தனது ஊழியர்களைக் கவனித்துக்கொள்வதிலும் அவர் கவனம் செலுத்துவது பற்றி எங்களுக்கு தெரியும். எனவே அவர் இன்று இங்கே இருந்திருந்தால், விமானத்திலும் தரையிலும் இருந்த ஊழியர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மக்கள் ஓர் அதிகாரத்துவ செயல்முறைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று நாங்கள் நம்பவில்லை. அதில் அவர்களுக்கு ஊதியம் தாமதமாகிறது. டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உயிருடன் இருந்திருந்தால் இதுபோன்ற அதிகாரத்துவ செயல்முறை இருந்திருக்காது. அவர், துக்கத்தில் இருக்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் தடைகளைத் தடுத்திருப்பார்” என அதில் தெரிவித்துள்ளார். மேலும், இழப்பீடு தொடர்பாகப் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களின் நிலைகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.