சம்பாய் சோரன்
சம்பாய் சோரன் pt
இந்தியா

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் சம்பாய் சோரன்

PT WEB

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரனை, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து, தனது பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார்.

ஹேமந்த் சோரன், சம்பாய் சோரன்

தொடர்ந்து, அக்கட்சியின் மூத்த தலைவரும், ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவருமாக அறியப்படும் அமைச்சர் சம்பாய் சோரன், 43 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன், ஆளுநர் சி. பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமைக் கோரினார். எனினும், புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுக்காமல் இருந்தார்.

இதையடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவதை தடுக்கும் விதமாக, காங்கிரஸ் ஆளும் தெலங்கானா மாநிலத்திற்கு, 43 எம்.எல்.ஏ. க்களையும் அழைத்துச் சென்று விடுதியில் தங்க வைக்க கட்சித் தலைமை முடிவு செய்தது. அதற்காக இரண்டு தனியார் விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக, அவர்களின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், மாநிலத்தில் ஆட்சியமைக்க சம்பாய் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி, மாநில முதலமைச்சராக சம்பாய் சோரன் இன்று முறைப்படி பதவியேற்க உள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு ஆளுநர் மாளிகையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அடுத்த 10 நாட்களில் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

81 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்டமன்றத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் 29 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சி வசம் 17 எம்.எல்.ஏ.க்களும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் ஒரு எம்.எல்.ஏ. என 47 பேர் உள்ளனர். பாஜக வசம் 25 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சி தப்பும் என்பதால், முதலமைச்சராக பதவியேற்றபின் சம்பாய் சோரனுக்கு இருக்கும் முக்கிய சவாலாக அது பார்க்கப்படுகிறது.