ஹேமந்த் சோரனுக்கு ஒருநாள் நீதிமன்ற காவல்; புதிய அரசை அமைக்க உரிமை கோரினார் சம்பாய் சோரன்!

ஜாரக்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் புதிய அரசை அமைக்க உரிமை கோரினார் சம்பாய் சோரன்.
ஹேமந்த் சோரன், சம்பாய் சோரன்
ஹேமந்த் சோரன், சம்பாய் சோரன்pt web

நிலமோசடி, சுரங்க முறைகேடு என மூன்று பண மோசடி வழக்குகளில் ஹேமந்த் சோரனுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை கூறி வந்த நிலையில், பல முறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. பின்னர் டெல்லியில் அவரது வீட்டில் சோதனையிட்ட அமலாக்கத்துறை, BMW கார், 36 லட்சம் ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தது.

ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன் pt web

இத்தகைய சூழலில் நேற்று, ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்து, அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடங்கினர். 6 மணி நேர விசாரணைக்கு பிறகு ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் ஆளுநர் மாளிகை சென்றார். ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை ஹேமந்த் சோரன் வழங்கினார். பின்னர் அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்தனர். இதனிடையே, ஹேமந்த் சோரன் ராஜினாமாவை ஆளுநர் ஏற்ற போதும், அக்கட்சியினரை சந்திக்க மறுப்பு தெரிவித்தார்.

அமலாக்கதுறை கைது குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஹேமந்த் சோரன், ”தோல்வியாக இதனை கருதவில்லை, தொடர்ந்து போராடுவேன். எதற்காகவும் சமரசத்தை எடுத்துக் கொள்ள மாட்டேன். வெற்றி, தோல்வி குறித்து அஞ்ச மாட்டேன். என் மக்களின் வலியை வீணாக்க மாட்டேன். ஜெய் ஜார்க்கண்ட்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சம்பாய் சோரன்
சம்பாய் சோரன்Twitter

3 வழக்குகளிலும் ஹேமந்த் சோரனுக்கு எதிரான ஆவணங்களை திரட்டி வரும் அமலாக்கத்துறை, நிலமோசடி வழக்கில் நேற்று கைது செய்தது.

இதனையடுத்து, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து பிர்சா முண்டா மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஹேமந்த் சோரன்.

இந்நிலையில் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் சம்பாய் சோரன். ஆளுநர் மாளிகை சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com