2021இல் உருவாக்கப்பட்ட அரட்டை செயலி முன்பு, தினசரி சுமார் 3,000 பேரால் மட்டுமே பதிவிறக்கம் செய்யப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக 3.5 லட்சம் கடந்திருக்கிறது. இச்செயலியை மேலும் மேம்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் வரும் நவம்பரில் இப்பணிகள் முடிவடையும் என்றும் ஸோஹோ தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்திருந்தார்.
இந்திய பயனாளிகளின் தரவுகள் மும்பை, டெல்லி, சென்னை ஆகிய ஊர்களில் உள்ள டேட்டா சென்டர்களில் மட்டுமே சேமிக்கப்படும் என்றும் உறுதி அளித்திருந்த அவர் உலகத்தின் தேவைக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலி அரட்டை என்றும் கூறியிருந்தார்.
இங்கு இயற்கையாக எழும் கேள்வி என்னவென்றால், சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தும் ஊடகங்களுக்கு மத்தியில் அரட்டையால் தாக்கம் செலுத்த முடியுமா என்பதுதான். ஏனெனில், வாட்ஸ்அப் சுமார் 50 கோடி, யூட்யூப் 48 கோடி, இன்ஸ்டாகிராம் 42 கோடி, ஃபேஸ்புக் 38 கோடி, எக்ஸ் 3 கோடி பயனாளர்களை கொண்டு இந்தியாவில் வலுவாக கால் பதித்துள்ள நிலையில் அவர்களுக்கு போட்டியாக ஒரு சமூக ஊடகம் இங்கிருந்து உருவாவதே ஒரு இமாலய சவாலாகவே உள்ளது. மிகமுக்கியமாக வாட்ஸ் அப் பயன்படுத்தும் பயனர்களில் 0.19% பேர் மட்டுமே தற்போது அரட்டை செயலியைப் பயன்படுத்துவதாக தரவுகள் கூறுகின்றன. ஆனால், நாடு முழுவதும் பல்வேறு வகைகளில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு மாற்றாக இந்திய செயலிகள் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்கும் செயல்பாடுகளும் நடந்தவண்ணம்தான் இருக்கின்றன.
இந்த அரட்டை செயலிக்குக்கூட, தர்மேந்திர பிரதான், அஸ்வினி வைஷ்ணவ், பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்தனர். அதேபோல், கூகிள் மேப்ஸுக்கு மாற்றாக Mappls by Mapmyindia என்பதைப் பயன்படுத்த வேண்டுமெனவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். மேப் மை இந்தியா நிறுவனமும், சாலை போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகத்துடன் கூட்டுசேர ஆர்வம் காட்டி வருகிறது.
இதற்கு முன்பும் பல இந்திய செயலிகள் பெருமளவில் பேசப்பட்டு இறுதியில் காணாமல் போய் இருக்கின்றன. உதாரணத்திற்கு ட்விட்டருக்கு மாற்று என்று வந்த கூ எனும் செயலி, டிக்டாக்கிற்கு மாற்றாக மோஜ் மற்றும் ஜோஷ் போன்ற செயலிகளும் பெரிதாக பேசப்பட்டன. ஆனால், அதற்கான ஆர்வம் அடங்கியதும் அந்த செயலிகள் தொடர்பான பேச்சும் அடங்கிப்போகும். கூ நிறுவனம் 10 மில்லியன் மாதாந்திரப் பயனர்களைக் கொண்டிருந்த போதும், நிதிப் பற்றாக்குறையால் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளானது.
இந்நிலையில்தான், Zoho நிறுவனத்தின் நிறுவனரும் மூத்த விஞ்ஞானியுமான ஸ்ரீதர் வேம்புவுடன் நமது செய்தியாளர் விக்னேஷ்முத்து பிரத்யேக கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது ஶ்ரீதர் வேம்பு கூறியதாவன... "ஆரம்பத்தில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டேன் இதை செய்ய வேண்டுமா? யாராவது இதற்கு வருவார்களா என எண்ணினேன். மைக்ரோசாப்ட் வெற்றி அடைந்து விட்டார்கள்; இதற்கு என்ன வாய்ப்பிருக்கிறது என நம்பிக்கை இழக்கக்கூடிய கேள்விகள் எழுந்தன. இன்றும் அரட்டை செய்தியை என்ன சொல்வார்கள்? whatsapp முழுமையாக ஜெயித்துவிட்டது. அரட்டைக்கு என்ன வாய்ப்பிருக்கிறது என சொல்வார்கள்.
அரட்டை செயலியில் பேமென்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. வாரம் வாரம் அரட்டை செயலியில் அப்டேட் வரும் ஆறு மாதங்களில் மிகப்பெரிய இடத்தில் இருக்கும். இதை தொழில்நுட்ப ரீதியாக இல்லாமல் நமது நாட்டின் முக்கியமான செயலியாக பார்க்கிறேன். நமது நாட்டின் முக்கியமான செயலி வெளிநாட்டின் கட்டுப்பாட்டில் இருப்பது நமக்கு நல்லது கிடையாது. இதை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். அரட்டை செயலி இந்திய நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. ஆப்ரேஷன் சிந்தூர் அண்மையில் நடந்தது. அப்போது எந்த செயலி நமக்கு பாதுகாப்பானது என்பதை பார்த்தோம். யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது முக்கியம். நம் நமது நாட்டில் இருக்கும் பொழுது இந்திய நாட்டின் சட்டத்தின் படி தான் இயங்க முடியும்.
அரட்டை செயலியில் தனிமனித சுதந்திரம் தொடர்பான அப்டேட்டுகள் வந்துவிட்டது. வெளிநாடுகள் நம்மை அழைக்கும் பொழுது செல்வது தப்பில்லை. அவர்கள் நம்மை வேண்டாம் என சொல்லும்பொழுது நாம் ஏன் அங்கு இருக்க வேண்டும்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 7 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா வரும்பொழுது ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்தார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். நாம் இந்தியர்கள் வெளிநாடு வந்து எவ்வளவு வெற்றி பெற்றாலும் நம் தாய்நாடு வளர்ச்சி அடைந்தால்தான் நமக்கு மதிப்பு இருக்கும் என தெரிவித்தார். தாய்நாடு நன்றாக இல்லாவிட்டால் உங்களுக்கு வெளிநாட்டில் மதிப்பு இருக்காது என தெரிவித்தார். இப்போது அதனை வெளிநாட்டில் இருக்கக்கூடிய இந்தியர்கள் உணர்கிறார்கள். Zoho மெயில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. பல அரசு அதிகாரிகளும் அதனை பயன்படுத்துகிறார்கள். சுயசார்பு குறித்து பேசப்படும் பொழுது அது வெளியே வருகிறது.
இந்திய நாட்டில் இருக்கக்கூடிய செயலுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்றுதான் தற்பொழுது மத்திய அரசு இதனை பெரிதாக பேசுகிறது. ஆனால் இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஒன்றுதான்” எனத் தெரிவித்தார்.
whatsapp செயலி முடக்கம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஸ்ரீதர் வேம்பு, “நான் ஏற்கனவே தெரிவித்தது போன்றுதான் ஒரு செயலி வேண்டாம் என சொல்லும்பொழுது நீங்கள் நமது நாட்டில் இருக்கக்கூடிய செயலியை பயன்படுத்துங்கள். அதைத்தான் உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. உங்களுக்கு சாப்பாடு கிடையாது என ஓட்டலில் சொல்லும் பொழுது நீங்கள் ஏன் போக வேண்டும்” என்றார்.
கூகுள் முதலீடு தொடர்பாக பேசிய ஸ்ரீதர் வேம்பு, “ஏ.ஐ.யில் இன்று மிகப்பெரிய பிரச்சனை இருக்கிறது. அதிகமான பவர் தேவைப்படுகிறது. இந்தியாவில் இதனை செய்தால் நமக்கு மின் கட்டணம் அதிகமாக உயர்ந்துவிடும். இந்த விஷயம் தற்பொழுது அமெரிக்காவில் நடக்கிறது. இதையெல்லாம் நாம் தற்பொழுது யோசிக்க வேண்டும். எல்லா விஷயத்திலும் அமெரிக்க செய்யக் கூடியதை நாம் செய்யக்கூடாது. Energy efficient தேவை. இந்திய நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் நமக்கு தேவைப்படுகிறது. சீனாவை நீங்கள் உதாரணமாக எடுக்க வேண்டும் நாம் இரண்டு நாடுகளும் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறோம். சைனா வேகமாக வளர்ந்து விட்டது. ஜிடிபி நம்மை விட அதிகமாக இருக்கிறது. ரோபோட் கார்கள் உள்ளிட்ட பலவற்றை தங்களது சுயசார்பில் செய்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.