Camera Makes You a Journalist? Supreme Court Questions Digital Media Credentials AI
இந்தியா

கேமரா இருந்தால் பத்திரிகையாளரா? உச்ச நீதிமன்றம் கேள்வி! பத்திரிகையாளர் குறித்து அதிரடி கருத்து!

டிஜிட்டல் தளங்களில் தங்களைப் பத்திரிகையாளர்கள் எனக் கூறிக்கொள்வதால் மட்டுமே, அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பைப் பெற முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

PT WEB

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

டிஜிட்டல் தளங்களில் தங்களைப் பத்திரிகையாளர்கள் எனக் கூறிக்கொள்பவர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் அதே பாதுகாப்பை அளிக்க வேண்டுமா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பத்திரிகையாளர் என்ற அந்தஸ்தைத் தாங்களாகவே அறிவித்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

Supreme Court on Journalist Status: Can Reel Makers Claim Protection?

கடந்த அக்டோபர் மாதம் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு (CEC) எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களிடம் காவல்துறையினர் அத்துமீறியதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாகப் பத்திரிகையாளர் அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.

அப்போது, பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு என்பது, அவர்கள் வைத்திருக்கும் தொழில்முறை அடையாளங்கள் மற்றும் அங்கீகாரத்தைப் பொறுத்தே அமையும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அச்சு ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் இந்திய பத்திரிகை கவுன்சில் (Press Council of India) மூலமாகவும், தொலைக்காட்சி ஊடகப் பணியாளர்கள் உரிய நடைமுறைகள் மூலமாகவும் அங்கீகாரம் பெற முடியும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஆன்லைன் ஊடகப் பணியாளர்களும் பதிவு செய்துகொள்ளலாம் என்றனர்.

ஆனால், தனிநபர்களாகச் செயல்பட்டு சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிடுபவர்களைப் பத்திரிகையாளர்களாகக் கருத முடியுமா என்பதில் தெளிவு தேவை என்றும், தங்களைப் பத்திரிகையாளர்கள் எனக் கூறிக்கொள்வதன் அடிப்படையில் மட்டும் அவர்களுக்கு அதே பாதுகாப்பை வழங்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

Supreme Court on Journalist Status: Can Reel Makers Claim Protection?

மேலும், போராட்டத்தின்போது சிலர் கேமரா மற்றும் மைக்ரோஃபோன்களைப் பயன்படுத்தி தங்களை ஊடகப் பணியாளர்கள் எனக் கூறிக்கொண்டு, போராட்டக்காரர்களுடன் இணைந்து முழக்கமிட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களையும் டெல்லி காவல்துறை சுட்டிக்காட்டியது. இதுபோன்ற நபர்கள் உண்மையான பத்திரிகையாளர்கள் அல்ல என்றும் வாதிட்டது.

இதற்கிடையே, கேரள பத்திரிகையாளர் சங்கம் (KUWJ) தாக்கல் செய்த மனுவில், அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய ஏழு பத்திரிகையாளர்களிடம் டெல்லி காவல்துறையினர் தவறாக நடந்துகொண்டதாகவும், அவர்களைத் தடுத்து வைத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி தலைமையிலான உயர்மட்ட விசாரணைக் குழுவை (HPEC) அணுகுமாறு அந்தச் சங்கத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் தேவைக்கு அதிகமான பலத்தைப் பயன்படுத்தினார்களா என்பதையும் அக்குழு விசாரிக்கலாம் எனத் தெரிவித்தது.

தொடர்ந்து பேசிய நீதிபதி ஜாய்மால்யா பாக்சி, இந்த மனுவில் பல்வேறு உண்மை சார்ந்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.

மேலும், பத்திரிகைச் சுதந்திரத்திற்கும் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையின் கடமைக்கும் இடையிலான சமநிலை குறித்தும் விரிவாக ஆராயப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், பத்திரிகையாளர் என்ற அடையாளத்தையும் அதற்கான பாதுகாப்பையும் யார், எந்த அடிப்படையில் பெற முடியும் என்ற விவாதத்தையும் இந்த வழக்கு மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளது.