8 படுக்கையறை.. 12 குளியலறை.. ரூ.56 கோடி செலவு! முதல்வராக கெஜ்ரிவாலின் ஆடம்பர மாளிகை! பாஜக விமர்சனம்!
கெஜ்ரிவாலின் ஆடம்பர பங்களா பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. பாஜக 'Sheesh Mahal' என விமர்சித்த இந்த பங்களாவில், ரூ.30 லட்சம் டிவி யூனிட், ரூ.5.47 லட்சம் சோபா உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ரூ.56 கோடி செலவுக்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
செய்தியாளர் - M.மீரா
டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வசித்த அரசு பங்களாவை, பொதுமக்கள் பார்வைக்காக திறக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. பாஜகவினரால் 'Sheesh Mahal' என்று அழைக்கப்படும் இந்த பங்களாவில் உள்ள ஆடம்பர வசதிகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
டெல்லி ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள இந்த பங்களாவில், கெஜ்ரிவால் 2015 முதல் 2024 வரை முதலமைச்சராக இருந்தபோது வசித்து வந்தார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பங்களாவை சுற்றிக் காட்டிய டெல்லி அமைச்சர் பர்வேஷ் வர்மா, அங்குள்ள விலை உயர்ந்த பொருட்களை பட்டியலிட்டார்.
அதன்படி, ரூ.11.56 லட்சம் மதிப்பிலான அலங்கார விளக்கு, ரூ.5.47 லட்சம் மதிப்பிலான இரண்டு பேர் அமரும் சோபா, ரூ.2.42 லட்சம் மதிப்பிலான ரிக்ளைனர் இருக்கை உள்ளிட்ட பொருட்கள் அங்கு இருப்பதாகக் கூறினார்.
மேலும் 8 படுக்கையறைகள், 12 குளியலறைகள், ஜக்கூசி குளியல் வசதி, ஸ்பா, 5 OLED தொலைக்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஆடம்பர வசதிகளும் இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த பங்களாவின் புதுப்பிப்புப் பணிகளுக்காக ரூ.56 கோடி செலவிடப்பட்டதாக அமைச்சர் பர்வேஷ் வர்மா குற்றம்சாட்டினார். கொரோனா காலத்தில் மக்கள் உயிரிழந்து கொண்டிருந்தபோது, கெஜ்ரிவால் இத்தகைய ஆடம்பர பங்களாவை உருவாக்கியதாகவும் விமர்சித்தார்.
இதற்கிடையே, யமுனை நதி மாசுபாடு பிரச்சனையை திசைதிருப்பவே பாஜக அரசு இந்த நடவடைக்கையை மேற்கொள்வதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் யமுனையில் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்தற்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது .

