121 கிலோ தங்க நகைகள்.. திருப்பதி கோயிலுக்கு ரூ.206 கோடி காணிக்கை! யார் இந்த சென்னைவாசி?
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வர்தமான் ஜெயின், 121 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.206 கோடி மதிப்பிலான காணிக்கையை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வழங்கியுள்ளார். இது கோயில் வரலாற்றில் மிகப்பெரிய காணிக்கையாகும். தொழில்துறையில் முன்னணி இடம் பெற்ற இவர், சமூகப் பணிகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்.
செய்தியாளர் - M.மீரா
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வர்தமான் ஜெயின், தனது மனைவி ராதிகா ஜெயினுடன் இணைந்து சுமார் ரூ.206 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க நகைகளை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார். திருப்பதி கோயில் வரலாற்றில் மிகப்பெரிய காணிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் வியாழக்கிழமை இந்தக் காணிக்கை வழங்கப்பட்டது. இதில் கிரீடம், மாலைகள், தோள்வளைகள், இடுப்பு ஆபரணங்கள் என மொத்தம் 46 வகையான தங்க நகைகள் இடம்பெற்றுள்ளன. சில நகைகளில் வைரங்களும் பதிக்கப்பட்டுள்ளன.
யார் இந்த வர்தமான் ஜெயின்?
வர்தமான் ஜெயின், உலகளவில் மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ வருவாய் மேலாண்மை சேவைகளை வழங்கும் Access Healthcare நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் துணைத் தலைவராக உள்ளார். மேலும், ஆசியா (சென்னை) இன்ஜினியரிங் நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார்.
சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் புள்ளியியல் படித்த இவர், பின்னர் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
1997-ஆம் ஆண்டு அனுராக் ஜெயினுடன் இணைந்து 'Vision Health Source' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். 2003ஆம் ஆண்டு பெரோட் சிஸ்டம்ஸ் (Perot Systems) நிறுவனம் இதை வாங்கியது.
2009-ஆம் ஆண்டு Dell நிறுவனம் பெரோட் சிஸ்டம்ஸைக் வாங்கியதைத் தொடர்ந்து, டெல் சர்வீசஸ் நிறுவனத்தின் உலகளாவிய அவுட்சோர்சிங் பிரிவின் நிர்வாக இயக்குநராக வர்தமான் ஜெயின் பொறுப்பேற்றார். அப்போது 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கான சேவைகளை நிர்வகித்ததுடன், சுமார் 9,000 ஊழியர்களைக் கொண்ட குழுவையும் வழிநடத்தினார்.
பின்னர் Access Healthcare நிறுவனத்தைத் தொடங்கி, சர்வதேச அளவில் மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் அவுட்சோர்சிங் துறையில் வளர்த்தெடுத்தார்.
2025 ஜனவரியில், அமெரிக்காவைச் சேர்ந்த நியூ மவுண்டன் கேபிடல் நிறுவனம் Access Healthcare-இல் பெரும்பான்மையான பங்குகளைப் பெறும் வகையில் முதலீடு செய்வதாக அறிவித்தது. இந்தப் பரிவர்த்தனையின் மதிப்பு சுமார் 1.5 முதல் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கூறப்பட்டது.
தொழில்துறையில் மட்டுமின்றி, கல்வி, உணவு வழங்குதல், அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
திருப்பதி கோயிலுக்கு ஏற்கெனவே ரூ.7 கோடி மதிப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலுக்கும், ரூ.5 கோடி மதிப்பில் மாட்டுத் தீவனக் கலவை ஆலை அமைக்கவும் நிதியுதவி அளித்துள்ளார். மேலும், கோயில் போக்குவரத்துக்காக மின்சாரப் பேருந்துகளையும் வழங்கியுள்ளார்.

